பக்கம் எண் :

1208
 
2952.வெய்யவன்காண் வெய்யகன லேந்தி னான்காண்

வியன்கெடில வீரட்டம் மேவி னான்காண்

மெய்யவன்காண் பொய்யர்மனம் விரவா தான்காண்

வீணையோ டிசைந்துமிகு பாடல் மிக்க

கையவன்காண் கையில்மழு வேந்தி னான்காண்

காமனங்கம் பொடிவிழித்த கண்ணி னான்காண்

செய்யவன்காண் செய்யவளை மாலுக் கீந்த

சிவனவன்காண் சிவபுரத் தெஞ்செல்வன் தானே.

7


(தி.1. ப.21. பா.7.) என்றருளினார் ஞானசம்பந்தரும். சீர் - புகழ், சீர் உடைய தேவர் - வேதங்களிலும், புராணங்களிலும் சொல்லப்படும் புகழை உடைய தேவர்கள். "சிவன்" என்றது, இங்கு, 'இன்பத்திற்குக் காரணன்' என்னும் பொருட்டு.

7. பொ-ரை: சிவபுரத்தெம் செல்வனாம் சிவபெருமான், கொடியவர்க்குக் கொடியவனும், வெப்பமிகு கனலை ஏந்தியவனும், பரந்த கெடிலநதிக்கரை மீதுள்ள அதிகை வீரட்டானத்து அமர்ந்தவனும், மெய்ப்பொருளினனும், பொய்யர் மனத்துட் புகாதவனும், இனிமைமிகும் பாடல் வீணையோடு இயைந்து இனிமை மேலும் மிகுதற்குக் காரணமான விரலினனும், கையில் மழுவாயுதத்தை ஏந்தியவனும், காமனது உடல் எரிந்து சாம்பல் ஆக விழித்த கண்ணினனும், செம்மை நிறத்தவனும், திருமகளைத் திருமாலுக்கு ஈந்தவனும் ஆவான்.

கு-ரை: "வெய்யவன்" என்றது, வெய்யவர்க்கு. மெய் யவன் - மெய்ப்பொருளாய் உள்ளவன். மிக்க கை - மிகுதற்கு ஏதுவாய கை; "கை" என்றது, ஈண்டு விரலை. 'பொடியாக விழித்த' என ஆக்கம் வருவிக்க.

செய்யவன் - செம்மை (நன்மை) யுடையவன். செய்யவள் - திருமகள்: இவள், பாற்கடலில் தோன்றிய விடத்தைச் சிவபெருமான் உண்டபின்னர், தேவர் அமுதம் வரக் கடைந்தபொழுது தோன்றினமை நோக்கி அப்பெருமானால் ஈயப்பட்டவளாக அருளினார்; இது வானவர்க்கு அமுதம் ஈந்தமை போல்வது என்க. இனி, 'வளை - சங்கு; செய்ய வளை - செம்மையாய (நன்றாய) சங்கு என உரைத்து, திருமாலுக்குச் சக்கரமே யன்றிச் சங்கினை அளித்த வரலாறு உளதேனும் கொள்க.