பக்கம் எண் :

1209
 
* * * * *

8,9


2953.கலையாரு நூலங்க மாயி னான்காண்

கலைபயிலுங் கருத்தன்காண் திருத்த மாகி

மலையாகி மறிகடலேழ் சூழ்ந்து நின்ற

மண்ணாகி விண்ணாகி நின்றான் தான்காண்

தலையாய மலையெடுத்த தகவி லோனைத்

தகர்ந்துவிழ வொருவிரலாற் சாதித் தாண்ட

சிலையாரும் மடமகளோர் கூறன் தான்காண்

சிவனவன்காண் சிவபுரத் தெஞ்செல்வன் தானே.

10

திருச்சிற்றம்பலம்


குறிப்பு: இத்திருப்பதிகத்துள், இதனை அடுத்த திருத்தாண்டகங்கள் கிடைத்தில; இறுதித் திருத்தாண்டகமே கிடைத்துளது.

8, 9. * * * * * *

10. பொ-ரை: சிவபுரத்தெம் செல்வனாம் சிவபெருமான், கலைகள் எல்லாம் பொருந்திய வேதநூலும் அங்கங்களும் ஆனவனும், கலைகளிற் பொருந்திய கருத்துக்களாய் உள்ளவனும், தீர்த்த மாயும், மலையாயும், அலைகள் மடங்கி வீழ் கடல்கள் ஏழும் சூழ்ந்து நின்ற நிலவுலகமாயும், விண்ணாயும், நின்றவனும், சிறந்த கயிலாய மலையை எடுத்த பண்புகெட்ட இராவணன் வலியிழந்து விடுமாறு ஒரு விரலால் முடித்தவனும், மலையில் தோன்றி வளர்ந்த மட மகளாம் பார்வதியைத் தன் கூறாகக் கொண்டு ஆண்டவனும் ஆவான்.

கு-ரை: கலை ஆரும் நூல் - கற்கப்படும் பொருள்கள் நிறைந்த நூல்; எனவே, 'உறுதிப் பொருள்களை உணர்த்தும் நூல்கள்' என்றவாறாயிற்று. அங்கம் - கருவி நூல், கலை பயிலும். கலைகளிற் பொருந்திய. கருத்தன் - கருத்துக்களாய் உள்ளவன்; இனி, 'கலைகளில் சொல்லப்படும் தலைவன்' என்றலுமாம், திருத்தம் - தீர்த்தம். தலையாய மலை, கயிலாயம். தகவு - பண்பு. தகர்ந்து - வலியழிந்து. சாதித்து - முடித்து. 'பின்பு ஆண்டருளிய' என்க. சிலை - மலை 'மலைமகள்' என்னும் பாடத்திற்கு சிலை - கல். என்க.