| 2956. | வருமிக்க மதயானை யுரித்தான் தன்னை | | | வானவர்கோன் தோளனைத்தும் மடிவித் தானைத் | | | தருமிக்க குழலுமையாள் பாகன் தன்னைச் | | | சங்கரன்எம் பெருமானைத் தரணி தன்மேல் | | | உருமிக்க மணிமாடம் நிலாவு வீதி | | | உத்தமர்வாழ் தரும்ஓமாம் புலியூர் மன்னும் | | | திருமிக்க வடதளியெஞ் செல்வன் தன்னைச் | | | சேராதே திகைத்துநாள் செலுத்தி னேனே. | 3 |
"எச்சன்" என்றதன்பின், செவ்வெண் வகையான் இயைத்து, 'இவர்களை' என்னும் தொகைச் சொல் விரித்து, திண்ணவிராய் எண்ணின், பன்மை பற்றி உயர்திணை முடிவு கொண்டதாக உரைக்க. "தொலைவித்தான்" என்றதனை, "கலை தொலைய" என்றதற்கும் கூட்டுக. 'அந்தணர்கள் (வேதத்தை) மிக ஓதி' என்க. எரி மூன்று, மேல் குறிக்கப்பட்டன. இத்தலம் அந்தணர்கள் மிக்கு வாழ்வது என்பது திருப்பதிகங்களுள் இனிது விளங்குவதாம். 3. பொ-ரை: எதிர்த்துவரும் மதமிக்க யானையின் தோலை உரித்தவனும், தக்கயாகத்தில் இந்திரனுடைய தோள்களை முற்றிலும் துணித்தவனும், நறுமணத்தைத்தரும் செறிந்த குழல் உமையாளின் பாகனும், சங்கரனும், எம்பெருமானும் ஆகி, பூமியின்மேல் ஒளிமிக்க மணிகளானியன்ற மாடங்கள் நிலவுகின்ற வீதிகளை உடையதும், மேலோர்கள் வாழ்வதும் ஆகிய ஓமாம்புலியூரில் அழகுமிக்க வடதளியில் மன்னும் எம்செல்வனாகிய சிவபெருமானை அடையாது நான் மயங்கி நாள் பல வீண் போக்கினேன். கு-ரை: வரும் - ஒழுகுகின்ற. 'வரும் மதம், மிக்க மதம்' எனத் தனித் தனி இயையும். வானவர்கோன் - இந்திரன்; அவனது தோளைச் சிவபிரான் துணித்தமையை மேலே (ப.31. பா.2.) காண்க. தோள்கள் நான்காதலின், "அனைத்தும்" என்றருளினார். 'தருதல்' என்பது, இங்கு 'தன்னை விளக்குதல்' என்னும் பொருட்டாய், வளர்தலைக் குறித்து, 'வளர்தல் மிக்க' எனக் குழலுக்கு (கூந்தலுக்கு) அடையாயிற்று. "சங்கரன்" என்புழியும் இரண்டனுருபு விரிக்க. உரு - ஒளி; இதனை மணிக்கு அடையாக்குக. திரு - அழகு.
|