பக்கம் எண் :

1214
 
ஓங்குமதில் புடைதழுவும் எழில்ஓமாம் புலியூர்

உயர்புகழந் தணரேத்த வுலகர்க் கென்றும்

தீங்கில்திரு வடதளியெஞ் செல்வன் தன்னைச்

சேராதே திகைத்துநாள் செலுத்தி னேனே.

5


2959.அருந்தவத்தோர் தொழுதேத்தும் அம்மான் தன்னை

ஆராத இன்னமுதை அடியார் தம்மேல்

வருந்துயரந் தவிர்ப்பானை உமையாள் நங்கை

மணவாள நம்பியைஎன் மருந்து தன்னைப்

பொருந்துபுனல் தழுவுவயல் நிலவு துங்கப்

பொழில்கெழுவு தரும்ஓமாம் புலியூர் நாளும்

திருந்துதிரு வடதளியெஞ் செல்வன் தன்னைச்

சேராதே திகைத்துநாள் செலுத்தி னேனே.

6


உயர்ந்த புகழினையுடைய அந்தணர்கள் புகழுமாறு பூசையும் விழவும் செவ்வனே நடைபெறுவதால் உலகோர்க்கு என்றும் தீங்கின்றி நிலவும் அழகிய வடதளிவாழ் எம்செல்வனாகிய சிவபெருமானை அடையாது நான் மயங்கி நாள் பல வீண் போக்கினேன்.

கு-ரை: இத்தலத்தில் அக்கினிதேவன் வழிபட்டு அருள் பெற்றமை இத் திருத்தாண்டகத்தால் அறியப்படுகின்றது. பாங்கு - நன்மை. 'நரகதனில்' என்பது பாடம் அன்று. இத்திருத்தாண்டகத்தின் மூன்றாம் அடியின் முதற்றூக்கு நாற்சீராகியும், மூன்றாஞ்சீர் மூவகைச் சீராய் நின்றது. 'உலகர்க்கு என்றும் தீங்கில்லாமைக்கு ஏதுவாகிய வடதளி' என்க; அஃது அன்னதாதல் அங்குப் பூசையும் விழவும் செவ்வனே நடைபெறுதலாம்.

6. பொ-ரை: அரிய தவமுடையோர் வணங்க வாழ்த்தும் தலைவனும், தெவிட்டாத இன்னமுதன்னவனும், அடியார்க்கு வரும் துயரங்களை விலக்குபவனும், நங்கை உமையாளின் கணவனாகிய நம்பியும், எனக்கு அமுதும் ஆகி, பயிர் வளர்ச்சிக்குப் பொருத்தமான புனலால் தழுவப்படும் வயலும், உயர்ச்சி நிலவும் பொழிலும் பொருந்தி விளங்கும் ஓமாம்புலியூரில் நாளும் நடைபெறுவன திருத்தமுற அமையும் அழகிய வட தளி வாழ் எம் செல்வனாகிய சிவபெருமானை அடையாது நான் மயங்கி நாள் பல வீண் போக்கினேன்.