| 2960. | மலையானை வருமலையொன் றுரிசெய் தானை | |
| மறையானை மறையாலும் அறிய வொண்ணாக் | |
| கலையானைக் கலையாருங் கையி னானைக் | |
| கடிவானை அடியார்கள் துயர மெல்லாம் | |
| உலையாத அந்தணர்கள் வாழும் ஓமாம் | |
| புலியூர்எம் உத்தமனைப் புரம்மூன் றெய்த | |
| சிலையானை வடதளியெஞ் செல்வன் தன்னைச் | |
| சேராதே திகைத்துநாள் செலுத்தி னேனே. | 7 |
கு-ரை: ஆராத - தெவிட்டாத. 'உமையாளாகிய நங்கைக்கு ஏற்ற மணவாளனாகிய நம்பி' என்க. 'நங்கை' என்பது பெண்டிருட் சிறந்தாட்கும், 'நம்பி' என்பது ஆடவருட் சிறந்தாற்கும் பெயராதல் அறிக. மருந்து - அமுதம்; 'என் மருந்து' என்றது, தமக்கு அநுபவமாகிய உவகைபற்றி. துங்கம் - உயர்ச்சி. திருந்து - எல்லாம் இனிது அமைந்த. 7. பொ-ரை: கயிலை மலையவனும், யானை ஒன்றின் தோலை உரித்தவனும், வேதத்தில் உள்ளவனும், அவ்வேதத்தாலும் அறியப்படாத தன்மையனும், மான் கன்று பொருந்திய திருக்கரத்தினனும், அடியார்களுடைய துயரங்களை நீக்குபவனும், எம்மால் வணங்கப்படும் உத்தமனும், திரிபுரங்களை எரித்த வில்லினனும் ஆகி ஒழுக்கத்தில் தளராத அந்தணர்கள் வாழும் ஓமாம்புலியூரில் வடதளி வாழ் எம் செல்வனாகிய சிவபெருமானை அடையாது நான் மயங்கி நாள் பல வீண் போக்கினேன். கு-ரை: மலையான் - மலையின்கண் (கயிலையில்) இருப்பவன். வருமலை - யானை. மறையான் - வேதத்தில் உள்ளவன்; 'எனினும் அதனால் அறியப்படாத தன்மையுடையவன்' என்றபடி. கலை - கூறு; தன்மைகள்; என்றது, அவனது அருளின் கூறுகளையேயாம். இது பற்றியே, வேதத்துட் சொல்லப்பட்ட ஈசானாதி ஐந்து பெருமந்திரங்களை முப்பத்தெட்டுக் கலைகளாக (கூறுகளாக) வைத்து நியசித்துச் சிவபெருமானை வழிபடும் முறையைச் சைவாகமங்கள் விதிக்கின்றன. கலை ஆரும் கையினான் - மான் பொருந்திய கையை உடையவன். 'அடியார்கள் துயரம் எல்லாம் கடிவான்' என்க. உலையாத - (ஒழுக்கத்தில்) தளராத.
|