| 2961. | சேர்ந்தோடு மணிக்கங்கை சூடி னானைச் | | | செழுமதியும் படஅரவும் உடன்வைத் தானைச் | | | சார்ந்தோர்கட் கினியானைத் தன்னொப் பில்லாத் | | | தழலுருவைத் தலைமகனைத் தகைநால் வேதம் | | | ஓர்ந்தோதிப் பயில்வார்வாழ் தருமோமாம் புலியூர் | | | உள்ளானைக் கள்ளாத அடியார் நெஞ்சிற் | | | சேர்ந்தானை வடதளியெஞ் செல்வன் தன்னைச் | | | சேராதே திகைத்துநாள் செலுத்தி னேனே. | 8 |
8. பொ-ரை: மணிகளைக் கொழித்து ஓடும் கங்கையைச் சூடியவனும், அழகிய மதியையும், படநாகத்தையும் உடன் தங்குமாறு வைத்தவனும், அடியடைந்தார்க்கு இனியனும், தன்னொப்பார் பிறரில்லாத தழல் நிறத்தவனும், எல்லார்க்கும் தலைவனும், பெருமை மிக்க நால் வேதங்களையும் ஓதி ஆராய்ந்து அவற்றிலேயே பழகுவார் வாழும் ஓமாம்புலியூர் உள்ளவனும், அடியாருடைய களவில்லா நெஞ்சில் சேர்ந்தவனும் ஆகி வடதளிவாழ் எம்செல்வனாகிய சிவபெருமானை அடையாது நான் மயங்கி நாள் பல வீண் போக்கினேன். கு-ரை: 'மணியோடு சேர்ந்து ஓடும் கங்கை'. என்க. 'மணிகளைக் கொழித்து ஓடும்' என்பது பொருள். உடன் - ஒருங்கு. 'மதியும் அரவும் தம்முள் இயையாத பகைப்பொருள்களாய் இருப்ப அவைகளை அவ்வாறின்றி இயைய வைத்தவன்' என்றபடி, "உரு" என்றது ஆகுபெயராதலின், 'தழல் போலும் உருவினானை' என்க. தலைமகன் - தலைவன். இறைவனை, "மகன்" என்றது, பான்மை வழக்கால் என்க. தகை - பெருமை. ஓர்ந்து - ஆராய்ந்து. கள்ளாத - களவு செய்யாத; என்றது, 'அறிவையும் பிறரை வஞ்சித்துப்பெறாத' என்றவாறு. இதனையே, 'எனைத்தொன்றும் - கள்ளாமை காக்க" என்றருளினார் திருவள்ளுவ நாயனார். (குறள் - 281.) இத்திருத்தாண்டகத்தை அடுத்து, இறுதித் திருத்தாண்டகமே உள்ளது. 9. * * * * * *
|