பக்கம் எண் :

1218
 

89. திருஇன்னம்பர்

பதிக வரலாறு:

சுவாமிகள் திருச்சத்திமுற்றத்திருக்கும் சிவக்கொழுந்தை வேண்டி, நல்லூரில் அவ் வேண்டுகோளாகிய திருவடிதீட்சை செய்தருளப் பெற்றார். திருநல்லூரில் இறைவர்க்குத் திருப்பணிகள் நாளும் செய்து பாவுற்ற தமிழ்மாலை பல பாடி வீற்றிருக்கும் நாட்களில் இத்தலம் அணைந்து பாடியருளியதாகலாம் இத்திருப்பதிகம். (தி.12 திருநாவு. புரா. 197)

குறிப்பு: இத்திருப்பதிகம், 'போலும்' என்னும் முடிபுடைய தொடர்களால் இறைவன் பெருமைகளை வகுத்து அருளிச்செய்தது.

திருத்தாண்டகம்

ப. தொ. எண்: 302

பதிக எண்: 89

திருச்சிற்றம்பலம்

2963.அல்லிமலர் நாற்றத் துள்ளார் போலும்

அன்புடையார் சிந்தை அகலார் போலுஞ்

சொல்லின் அருமறைகள் தாமே போலுந்

தூநெறிக்கு வழிகாட்டுந் தொழிலார் போலும்

வில்லிற் புரமூன் றெரித்தார் போலும்

வீங்கிருளும் நல்வெளியு மானார் போலும்

எல்லி நடமாட வல்லார் போலும்

இன்னம்பர்த் தான்தோன்றி யீச னாரே.

1


1. பொ-ரை: இன்னம்பர்த் தலத்துத் தான்தோன்றி யீசனாராகிய சிவபெருமானாரே அக இதழ்களையுடைய மலர்களின் நறுமணத்துள் நிலவி இன்பந்தருபவரும், தம்மாட்டு அன்புடையார் சிந்தையை விட்டு அகலாதவரும், தாமே சொற்களையுடைய அரிய வேதங்கள் ஆனவரும், வீட்டுநெறிக்கு வழியாகும் மெய்ஞ்ஞானத்தை உணர்த்தும் தொழிலினரும், வில்லால் புரமூன்றையும் எரித்தவரும், மிக்க இருளும் மிக்க ஒளியும் ஆனவரும், இரவில் கூத்து ஆட வல்லவரும் ஆவார்.