பக்கம் எண் :

1219
 
2964.கோழிக் கொடியோன்தன் தாதை போலும்

கொம்பனாள் பாகங் குளிர்ந்தார் போலும்

ஊழி முதல்வரும் தாமே போலும்

உள்குவா ருள்ளத்தி னுள்ளார் போலும்

ஆழித்தேர் வித்தகருந் தாமே போலும்

அடைந்தவர்கட் கன்பராய் நின்றார் போலும்

ஏழு பிறவிக்குந் தாமே போலும்

இன்னம்பர்த் தான்தோன்றி யீச னாரே.

2


கு-ரை: அல்லி - அகஇதழ். 'அக இதழ்களையுடைய மலர்களது நறுமணங்களிலே இருந்து இன்பம் தருவார்' என்க. சொல்லின் அருமறைகள் - சொற்களையுடைய அரிய வேதங்கள். தூநெறியாவது, மெய்யுணர்வு; தத்துவஞானம்; அதனை இறைவர், தம்மை நோக்கிச் செய்யும் தவம் காரணமாக வந்து அருளுதலாலும், அஃது, அவரது ஐந்தொழில்களில் முடிந்த பயனாய் உள்ள தொழிலாதலாலும், "தூநெறிக்கு வழிகாட்டும் தொழிலார்" என்று அருளினார். வீங்கு இருள் - மிக்க இருள். "நல் வெளி" என்றதும், 'மிக்க ஒளி' என்னும் பொருளதே. இறைவரை இருளாகவும அருளியது, மலத்தினது ஆற்றல் கெடுதற் பொருட்டு, அதன்வழிநின்று அதனைத் தொழிற் படுத்தல் பற்றி என்க. இதனையே,

"ஏயுமும் மலங்கள் தத்தம் தொழிலினை இயற்ற ஏவும்
தூயவன் றனதோர் சத்தி திரோதான கரியது"

எனச் சிவஞானசித்தியும். (சூ. 2. 87.)

"பாகமாம் வகைநின்று திரோதான சத்தி
பண்ணுதலான் மலம்எனவும் பகர்வர்"

எனச் சிவப்பிரகாசமும் (3.20) விளக்கின. எல்லி - இரவு. இத்தலத்தில் சிவபிரானைச் சுவாமிகள், 'தான்தோன்றி (சுயம்புமூர்த்தி)' என்றே அருளுகின்றார்.

2. பொ-ரை: இன்னம்பர்த் தான்தோன்றி ஈசனாராகிய சிவபெருமானாரே கோழிக்கொடியோனாகிய முருகனுக்குத் தந்தையாரும், பூங்கொம்பு போன்ற உமாதேவியை உடலின் ஒரு பாகமாகக் கொண்டு மகிழ்ந்தவரும், ஊழியின் நிகழ்ச்சிகளுக்குத் தலைவரும், தம்மை நினைப்பவர் உள்ளத்தில் தாம்