| 2966. | வானத் திளந்திங்கட் கண்ணி தன்னை | | | வளர்சடைமேல் வைத்துகந்த மைந்தர் போலும் | | | ஊனொத்த வேலொன் றுடையார் போலும் | | | ஒளிநீறு பூசு மொருவர் போலும் | | | தானத்தின் முப்பொழுதுந் தாமே போலும் | | | தம்மிற் பிறர்பெரியா ரில்லார் போலும் | | | ஏனத் தெயிறிலங்கப் பூண்டார் போலும் | | | இன்னம்பர்த் தான்தோன்றி யீச னாரே. | 4 |
4. பொ-ரை: இன்னம்பர்த் தான்தோன்றி ஈசனாராகிய சிவபெருமானாரே வானில் திகழும் பிறைச்சந்திரனாகிய கண்ணியைத் தம் வளரும் சடைமேல் வைத்து மகிழ்ந்த வலியவரும், ஊன் பொருந்திய சூலம் ஒன்றை உடையவரும், ஒள்ளிய திருநீற்றைப் பூசும் ஒருவரும், முச்சந்தி நேரங்களிலும் வழங்கப்படும் அருக்கியம் முதலியவற்றை ஏற்று அருள்பவரும், தம்மினும் பெரியர் பிறர் இல்லாதவரும், பன்றியினது கொம்பு மார்பில் விளங்க அணிந்தவரும் ஆவார். கு-ரை: 'வானத்துத் திங்கள்' என இயையும்; 'வானத்துக் கண் உலாவுவதாகிய திங்கள்' என்பது பொருள். 'திங்களாகிய கண்ணி' என்க. கண்ணி - முடியில் அணியும் மாலை. ஒத்த - பொருந்திய. "வேல்" என்றது, சூலத்தை. தானம் - கொடை; அது, சந்தியா காலங்களில் அருக்கியம் முதலியன கொடுத்தலைக் குறித்தது. முப்பொழுது என்றது, சந்தியா காலங்களை. 'அக்காலங்களின் முதல்வராய் இருந்து, வழிபடுவோர் செய்யும் வழிபாடுகளை ஏற்றருளுபவர்' என்றபடி. 'எல்லாவற்றையும் சிவபிரானே ஏற்றருளுபவன் என்பது என்னை?' என்னும் ஐயத்தினை நீக்குதற்கு, "பிறர்பெரியார் இல்லார்" என்று அருளினார். இதனையே சிவஞான சித்தி (சூ. 2. 25.) "யாதொரு தெய்வங் கொண்டீர் அத்தெய்வ மாகியாங்கே மாதொரு பாக னார்தாம் வருவர்மற் றத்தெய் வங்கள் வேதனைப் படும்இ றக்கும் பிறக்கும்மேல் வினையும் செய்யும் ஆதலால் இவையி லாதான் அறிந்தருள் செய்வ னன்றே". என விளக்கிற்று.
|