பக்கம் எண் :

1230
 
2976.விண்ணவனை மேருவில்லா வுடையான தன்னை

மெய்யாகிப் பொய்யாகி விதியா னானைப்

பெண்ணவனை ஆணவனைப் பித்தன்தன்னைப்

பிணமிடுகா டுடையானைப் பெருந்தக் கோனை

எண்ணவனை எண்டிசையுங் கீழும் மேலும்

இருவிசும்பும் இருநிலமு மாகித் தோன்றுங்

கண்ணவனைக் கஞ்சனூ ராண்ட கோவைக்

கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந் தேனே.

4


'பகீரதன் பொருட்டுப் பின்னர் கங்கை நிலத்தில் இழிந்த சடை' என்றுரைப்பினும் ஆம். செக்கர்வான் - செவ்வானம். சேராது - தன்னை (சிவபிரானை) அடையாமல். எண்ணி - (அமரர்கூடி) ஆராய்ந்து. கொண்டு உகந்த - மேற்கொண்டு விரும்பிச்செய்த. இது தக்கன் வேள்வியே ஆயினும், அமரர் பலரும் உடம்பட்டுச் செய்தமையின் இவ்வாறு அருளினார். தலையறுக்கப்பட்ட தலைவர், தக்கனும் எச்சனும்; பல் தகர்க்கப்பட்டவன் சூரியன்; கண்பறிக்கப்பட்டவன் பகன். கண்டகன் - கொடியவன்; என்றது, இவ்வாறு அவர்களைக் கண்ணோட்டம் இன்றி ஒறுத்தமைபற்றி இகழ்வார்போல இவ்வாறு அருளிச்செய்தாராயினும், இவ்வொறுப்புக்கள் அவர்கள் பிற்றைஞான்று நெடுங்காலம் கரையேறாது புக்கழுந்தும் துன்பக் குழியினைத் தீர்த்த பெருங் கருணைச் செயலாதலின், 'அதனைச் சிறிதும் நெகிழவிடாது செய்தவர்' எனப் புகழ்ந்ததேயாம் என்க.

4. பொ-ரை: சிவலோகனாய், மேருமலையை வில்லாக உடையவனாய், ஞானியர்க்கு உண்மைப்பொருளாகி, உணர்வில்லார்க்கு இல்பொருள் ஆகி அறநெறியும் அருள்நெறியும் ஆனவனும், பெண் ஆண் ஆனவனும், பித்தனும், பிணத்தைப் புதைக்கும் இடுகாட்டை இடமாகக் கொண்டவனும், மேலான தகுதியினனும், எண்ணமானவனும், எட்டுத் திசைகளும் கீழும் மேலும் பெரிய ஆகாயமும் பரந்த நிலமும் ஆகித் தோன்றுபவனும், கண்போற் சிறந்தவனும், கஞ்சனூரை ஆண்ட கோவும் ஆகிய கற்பகத்தைக் கண்ணாரக் கண்டு மேல் வரும் பிறப்பை நீங்கினேன்.

கு-ரை: "விண்ணவன்" என்பதில் உள்ள விண், சிவ லோகத்தை குறிக்கும். 'மேருவை வில்லாக உடையான்' என்க. மெய்யாதல் -