பக்கம் எண் :

1231
 
2977.உருத்திரனை உமாபதியை உலகா னானை

உத்தமனை நித்திலத்தை ஒருவன் தன்னைப்

பருப்பதத்தைப் பஞ்சவடி மார்பி னானைப்

பகலிரவாய் நீர்வெளியாய்ப் பரந்து நின்ற

நெருப்பதனை நித்திலத்தின் தொத்தொப் பானை

நீறணிந்த மேனியராய் நினைவார் சிந்தைக்

கருத்தவனைக் கஞ்சனூ ராண்ட கோவைக்

கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந் தேனே.

5


உணர்வுடையோர்க்கு அநுபவப் பொருளாதல். பொய்யாதல், உணர்விலார்க்கு இல்பொருள்போல உணரவாரா திருத்தல். விதி - நெறி; அஃது 'அறநெறியும், அருள் நெறியும்' என இருவகைத்து என்க. பிணம் இடு காடு - பிணத்தைப் புதைக்கும் காடு. பெருந்தக்கோன் - மேலான தகுதியை உடையவன். எண் - கருத்து. கண்ணவன் - கண்போலச் சிறந்து நிற்பவன்.

5. பொ-ரை: உருத்திரனும், உமாபதியும், உலகு ஆள்பவனும், உத்தமனும், நித்திலம் அனையவனும், ஒப்பற்றவனும், மலையாய் விளங்குபவனும், மயிர்க் கயிறாகிய பஞ்சவடிப்பூணூல் திகழ் மார்பினனும், பகலும், இரவும், நீரும், ஆகாயமும், பரவிய நெருப்பும் ஆனவனும், முத்தின்கொத்து ஒக்கத் திகழும் திருநீற்றுக் கீற்றினனும், திருநீற்றைப் பூசிய மேனியை உடையவராய், இடைவிடாது நினைக்கும் அன்பர்களின் மனத்தில் உறைபவனும், கஞ்சனூர் ஆண்ட கோவும் ஆகிய கற்பகத்தைக் கண்ணாரக் கண்டு மேல் வரும் பிறப்பை நீங்கினேன்.

கு-ரை: உருத்திரன் - 'உருத்திரன்' என்னும் காரணக்குறியை உடையவன். இதன் காரணமாவது, 'துன்பத்தை ஓட்டுபவன்' என்பது. இதனை,

"இன்னலங் கடலுட் பட்டோர் யாரையும் எடுக்கும் நீரால்
உன்னரும் பரம மூர்த்தி உருத்திர னெனும்பேர் பெற்றான்"

எனக் கந்தபுராணமும் (ததீசிப்படலம் - 46.)

"இடும்பைநோய், என்ப தோட்டும் இயல்பின் உருத்திரன்" எனக் காஞ்சிப் புராணமும் (பரசிராமீச்சரம் - 44.) இனிது விளக்கின.