இனி; 'உருத்திரன்' என்னும் பெயர், 'ரோதனம் (அழுதல்) செய்தவன்' என்னும் காரணத்தான் வந்தது என்பாரும் உளர்; அஃது அப்பெயர் அக்கினி தேவனைக் குறிக்குமிடத்திலாம் என்றே உணர்வுடையோர் பகுத்துணர்ந்து கொள்வர் என்பதனையும் கந்தபுராணம் மேற்காட்டிய இடத்திலே. "செந்தழ லென்ன நின்ற தேவனுக் குருத்தி ரப்பேர் வந்தது புகல்வன் கேட்டி வானவர் யாரும் ஈண்டி முந்தையில் அவுணர் தம்மை முனிந்திட முயன்று செல்ல அந்தமில் நிதியந் தன்னை அவ்வழி ஒருங்கு பெற்றார்" "பெற்றிடு நிதியம் எல்லாம் பீடிலாக் கனல்பால் வைத்துச் செற்றலர் தம்மேற் சென்று செருச்செய்து மீண்டு தேவர் உற்றுழி அதுகொ டாமல் ஓடலுந் தொடர்ந்து சூழ மற்றவன் கலுழ்த லாலே வந்தது மறையுங் கூறும்" "ஓதுமா மறைகள் தம்மில் உருத்திர னெனும்பேர் நாட்டி ஏதிலார் தம்மைச் சொற்ற தீசன்மேற் சாரா அந்த ஆதிநா யகனைச் சுட்டி அறைந்தவும் பிறர்மாட் டேறா மேதைசாலுணர்வின் ஆன்றோர்விகற்பம்ஈதுணர்வரன்றே" எனத் தெரித்துக் காட்டியது. இங்ஙனமாகவும், அக்கினிக்குச் சொன்ன காரணத்தையே சிவபிரான்மாட்டுக் கற்பித்துக் கூறுவார், அதனால் அடைவது உய்தியில் குற்றம் அன்றி வேறு இன்று; அன்றியும், வேறு வேறு காரணத்தால் வேறு வேறு பொருளை உணர்த்தும் பல பொருள் ஒரு சொற்கள் அவ்வப்பொருளை உணர்த்துமிடத்து அவ்வக் காரணங்களையே கூறாது, ஒரு காரணத்தினையே யாண்டும் கூறுதல் புலமை நெறியும் ஆகாமை அறிக. எனவே, துன்பந் துடைக்கவல்லனாய காரணம் பற்றிச் சிவபிரான், 'உருத்திரன்' எனச் சிறந்தெடுத்துப் போற்றப்படுவன் என்பதனை உணர்த்தி யருளுவார், "உருத்திரனை" என்று அருளிச்செய்த அருமை அறியற்பாலதாதலறிக. உமாபதி - உமைக்குத் தலைவன். உத்தமன் - யாவரினும் மேலானவன். ஒருவன் - ஒப்பற்றவன். சிவபிரான் ஒருவனையே 'ஒருவன் (ஏகன்)' என உபநிடதங்கள் கூறும் என்பது, பலவிடத்துங் காட்டப்பட்டது. "ஒருவன் என்னும் ஒருவன் காண்க" என்பது திருவாசகம் (தி.8 திருவண். 43.) பருப்பதம் - மலையாய் இருப்பவன். பஞ்சவடி - மயிர்க் கயிறாகிய பூணூல்.
|