| 2978. | ஏடேறு மலர்க்கொன்றை யரவு தும்பை | | | இளமதியம் எருக்குவா னிழிந்த கங்கை | | | சேடெறிந்த சடையானைத் தேவர் கோவைச் | | | செம்பொன்மால் வரையானைச் சேர்ந்தார் சிந்தைக் | | | கேடிலியைக் கீழ்வேளூ ராளுங் கோவைக் | | | கிறிபேசி மடவார்பெய் வளைகள் கொள்ளுங் | | | காடவனைக் கஞ்சனூ ராண்ட கோவைக் | | | கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந் தேனே. | 6 |
வெளி - ஆகாயம். நெருப்பு - நெருப்பாய் இருப்பவன். நித்திலம் - முத்து. தொத்து - கொத்து; இவ் உவமை, சிவபிரானது திருநீற்றுக் கோலத்தை விளக்க வந்தது. சிந்தைக் கருத்தவன் - மனத்தின்கண் கருதப்படும் பொருளாய் உள்ளவன். 6. பொ-ரை: இதழ் செறிந்த கொன்றைமலர், பாம்பு, தும்பைப்பூ, பிறைச்சந்திரன், எருக்க மலர், வானின்றிறங்கிய கங்கை ஆகியவைகளால் அழகு விளங்கிய சடையினனும், தேவர்க்குத் தலைவனும், பெரிய செம்பொன்மலை போன்றவனும், தன்னை அடைந்தார் சிந்தையில் கேடின்றி இருப்பவனும், கீழ்வேளூரிலிருந்து ஆளும் அரசனும், மடவார்கைகளில் அணிந்துள்ள வளைகளைப் பொய்பேசிக் கவர்ந்து கொள்ளும் அதிசயிக்கத்தக்க திறனுடையவனும், கஞ்சனூர் ஆண்ட கோவும் ஆகிய கற்பகத்தைக் கண்ணாரக் கண்டு மேல் வரும் பிறப்பை நீங்கினேன். கு-ரை: ஏடு - இதழ். வான் இழிந்த - ஆகாயத்தினின்றும் இறங்கிய. சேடு எறிந்த - அழகு விளங்கிய. செம்பொன்மால் வரையான் - செம்பொன்மலைபோன்றவன். சேர்ந்தார் - தன்னை அடைந்தவர்; 'அவரது சிந்தையில் கேடின்றி (நீங்குதல் இன்றி) இருப்பவன்' என்க. கிறி - பொய். 'மடவார் வளைகள்' என இயையும், பெய்வளை - அவர் தம் கைகளில் அணிந்துள்ள வளைகள். இனி, பிச்சையோடு உடன் வீழ மடவார்கள் பெய்தவளைகளை மீள ஈயாமல் "எம் கையில் வந்தது எமது ஆகலே வழக்கு" (பிச்சாடன நவமணி மாலை) எனக் கொண்டு செல்லும் என்று உரைத்தலுமாம். காடவன் - அதிசயிக்கத் தக்க திறலுடையவன்; இது காடம் என்னும் ஆரியச் சொல்லினின்றும் பிறந்த பெயர்.
|