பக்கம் எண் :

182
 

அவ்வருகாலில் உள்ள கல்வெட்டு உணர்த்து கின்றது. இக்கோபுர வாசலுக்கு அந்தப்புரப்பெருமாள் திருவாசல் என்று பெயர். இத்திருவாசலுக்கு எதிரிலுள்ள மண்டபம் திருவண்ணாமலை ஆதீனம், மயிலாடுதுறை வைத்தியலிங்கத் தம்பிரானால் சாலிவாகன சகாப்தம் 1716 செல்லாநின்ற ஆனந்த வருஷம் ஆனிமாதம் 16 உ கட்டப்பெற்றதை அங்குள்ள தூண் ஒன்றின் அடிப்பாகத்தில் உள்ள கல்வெட்டு உணர்த்துகிறது. அம்மண்டபம் கட்டப்பெற்று இற்றைக்கு 161 ஆண்டுகள் ஆகின்றன.

அண்டாபரணத் தேவரைப்பற்றிய செய்தி:

அந்தப்புரப் பெருமாள் திருவாசலுக்கு வடபால் உள்ள கோயிலில் எழுந்தருளியிருந்தவர் அண்டாபரணத்தேவர் ஆவர். இதை அக்கோயில் கல்வெட்டு உணர்த்துகிறது. அவர் திருமேனி இது பொழுது அங்கு இல்லை. அங்குக் கொற்றவை அல்லது மகுடசூர சம்ஹாரியின் திருமேனிதான் இருக்கிறது. இந்த அண்டாபரணத் தேவர்க்குத் திருப்பண்ணி காரப்புறத்திற்கும், சிறப்பாகத் தோள்மாலை செய்து சாத்தத் திருநந்தவனத்திற்கும், திருநந்தவனஞ்செய்து திருப்பூமண்டபத்தில் திருப்பள்ளித்தாமம் அளிப்பார்க்கு ஜீவனத்திற்கும், பெரும்பற்றப்புலியூர் பிடாகை நல்லாலியான விக்கிரமசோழ நல்லூரில் ஏழுமா நிலமும், அங்கே நீருரிமைகொண்ட குழி நாநூற்றுஐம்பத்திரண்டும், கோயில் பூண்டியான க்ஷத்திரிய சிகாமணி நல்லூரில் நூறுகுழியும், ஐயங்கொண்டசோழப் பட்டினத்துப் பிடாகை அளக்குடியில் விளை நிலமும், கொல்லையும் ஆகக்குழி எழு நூற்றைம்பதும் குமாரமங்கலமான அழகியநல்லூரில் வடவனாறு என்று பேர் கூவப்பட்ட நிலம் நான்குமாக் காணியும், நாற்றங்கால் நிலம் காணியும் ஆக நான்மாவரை நிலங்களும், நிவந்தங்களாக விடப்பெற்றிருந்தன.

திருத்தொண்டத்தொகை ஈச்சரம்:

இப்பெயருள்ள திருக்கோயில் சிங்காரத்தோப்பு என்று இக்காலம் வழக்கப்பெறும், திருக்களாஞ்செடி உடையார் திருக்கோயிலின் வட புறச்சுவரில் உள்ள மூன்றாங் குலோத்துங்கசோழன் காலத்துக் கல்வெட்டில் குறிக்கப்பெற்றுள்ளது. அது திருத்தொண்டத் தொகையீஸ்வரமுடையார் ஸ்ரீகோயிலும், திரு முற்றமும், திருமடை வளாகமும் திருக்குளமும் உடையதாய் இருந்ததை அக்கல்வெட்டு உணர்த்துகின்றது. அது இத்தில்லைச் சிற்றம்பலக் கோயில் மூன்றாம் பிராகாரத்தில் இல்லை என்பது உறுதி.