பக்கம் எண் :

183
 

கோபுரங்கள்:

தெற்குக்கோபுரம், பாண்டியனால் கட்டப்பெற்றதாகும். கோபுரவாசல் மேல்தளத்திலும், இரு அருகால்களிலும் இரட்டைக் கயல் மீன்கள் பொறிக்கப்பெற்று அவைகளின் நடுவில் செண்டும் செதுக்கப்பெற்றுள்ளன. இங்ஙனம் இரண்டுகயல் மீன்கள் செதுக்கப்பட்டிருக்குமானால் அத்திருப்பணி பாண்டியனுடைய காலத்திலேயே முற்றுப்பெற்றதைக் குறிக்கும். முற்றுப்பெறாதாயின் ஒரே கயல் மீன்தான் செதுக்கப்பட்டிருக்கும். எனவே இத்தெற்குக் கோபுரம் பாண்டியர் ஒருவரால் முதல் முதலில் கட்டப்பெற்றது என்பது உறுதியாகும். ஆனால் செங்கற்பட்டுத் தாலூகா முக்தீஸ்வரர் கோயிலில் வட மேற்குப்புறச் சுவரில் செதுக்கப்பட்டிருக்கும் கல்வெட்டு, இத்தெற்குக் கோபுரம், முதலாம் கோப்பெருஞ்சிங்கதேவரால் கட்டப்பெற்றதாகக் கூறுகின்றது. அது "கோப்பெருஞ்சிங்க தேவர்க்கு யாண்டு ஐந்தாவது தனியூர் பெரும்பற்றப்புலியூர் உடையார் திருச்சிற்றம்பல முடையார்க்கு அழகிய சீயன் அவனி ஆளப்பிறந்தான் காடவன் கோப்பெருஞ்சிங்கனேன். இந்நாயனார்கோயில் தெற்குத் திருவாசலில் சொக்கச்சீயன் திருநிலை எழு கோபுரமாகச் செய்த திருப்பணிக்கு உடலாக" எனத்தொடங்குகிறது. மேலும் கர்நூல் மாவட்டம், மார்க்காப்பூர் வட்டம் திருப்புராந்தகத்தில் உள்ள நாகரியிலும், தெலுங்கிலும் வெட்டப்பட்ட கல்வெட்டு இத்தெற்குக் கோபுரம் முதலாம் கோப்பெருஞ்சிங்கனால் கட்டப்பெற்றதையும் குறிப்பிடுகின்றது. எனவே முதல் முதலில் பாண்டியர் ஒருவரால் கட்டப் பெற்றிருந்த இக்கோபுரத்தில், கோபுரவாசலின் மேல்தளம் வரை வைத்துக்கொண்டு எஞ்சிய பகுதிகளை எல்லாம் இடித்துவிட்டு, முதலாம் கோப்பெருஞ்சிங்கன் கட்டினான் என்று கொள்ளுதல் பொருத்தமுடையதாகும். இங்ஙனம் இவனால் கட்டப்பெற்ற இக்கோயில் திருப்பணிக்கு உடலாக ஜயங்கொண்ட சோழமண்டலத்து ஊற்றுக்காட்டுக் கோட்டத்துஆற்றூர் நாட்டு, ஆற்றூரான இராஜராஜ நல்லூரில் 301 3/4 வேலி நிலம் இப்பல்லவ மன்னனால் கொடுக்கப் பெற்றிருந்தது. இச்செய்தி திரு ஏகம்பம் உடையார் கோயிலிலும் செதுக்கப்பட்டுள்ளது. இத்தெற்குக் கோபுரம் சொக்கச்சீயன் திருநிலை எழுகோபுரம் என்று பெயர்.

மேற்குக் கோபுரம், வடக்குக் கோபுரம்:

மேற்குக் கோபுரம் முதலாம் ஜடாவர்மன் சுந்தர பாண்டியனாலும் வடக்குக் கோபுரம் கிருஷ்ண தேவராயராலும் கட்டப்பெற்றன.