பக்கம் எண் :

184
 

இச்செய்திகளை மேற்குறித்த கர்நூல் மாவட்டம் மார்க்கர்ப்பூர் வட்டம் திருப்புராந்தகத்திலுள்ள கல்வெட்டுத் தெரிவிக்கின்றது. வடக்குக் கோபுரத்தில் கிருஷ்ணதேவராயருடைய பிரதிமை இருக்கிறது. "இக்கோபுரத்தில் ஸிம்ஹாத்திரை பொருட்டுப் பொத்தனூர்க்கு எழுந்தருளி ஜயஸ்தம்பம் நாட்டி, திரும்பி பொன்னம்பலத்திற்கு எழுந்தருளி பொன்னம்பல நாதனையும் சேவித்துக் கட்டுவித்த ஸேவை" என்ற கல்வெட்டும் இருக்கின்றது. இவற்றால் இவ்வடக்குக் கோபுரத்தைக் கட்டுவித்தவர் வீரப்பிரதாப கிருஷ்ணதேவ மகாராயர் என்பது உறுதியெய்துகின்றது.

கிழக்குக் கோபுரம்:

இது இரண்டாம் கோப்பெருஞ்சிங்கனால் கட்டப்பெற்றது. பல பேரறங்களைச்செய்து குன்றாப்புகழ்பெற்ற திருபச்சையப்ப முதலியாரின் மனைவியராகிய ஐயாளம்மாளின் தாயாராகிய சுப்பம்மாளால் இக்கோபுரம் பழுதுபார்க்கப்பெற்றது. இவ்வம்மை யாருடையவும், பச்சையப்ப முதலியாருடையவும் பிரதிமங்கள் இக் கோபுரத்தில் இருக்கின்றன.

வடக்குக் கோபுரத்தில் இருக்கும் சில பிரதிமைகள்:

இக் கோபுரத்தில் இருக்கும் வீரப்பிரதாபகிருஷ்ணதேவ மகாராயரின் பிரதிமைபற்றி முன்னர்க் கூறப்பெற்றது. அத்துடன், அவர் பிரதிமைக்குக் கீழ்ப்பால், இருக்கும் சில பிரதிமைகளின்கீழ், விருத்தகிரியில் செவகப்பெருமாள், அவனுடைய மகன் விஸ்வமுத்து, திருப்புறைக் கொடை ஆசாரி திருமருங்கன் அவனுடைய தம்பி காரணாச்சாரி எனச் செதுக்கப்பெற்றுள்ளன. இவ்வெழுத்துக்கள் பதினாறாம் நூற்றாண்டு எழுத்துக்களாகப் புலப்படுகின்றன. இவர்கள் இக்கோபுரத்தைக்கட்டிய சிற்பிகளாதல் வேண்டும்.

மேற்குக்கோபுரத்தில் இருக்கும் திருமேனிகள்:

காமதேவன், அகத்தியர், ஸ்ரீதேவி, தேவேந்திரன், துர்க்கா தேவி இத்திருமேனிகள் கோபுரவாசலுக்குத் தென்பால் கிழக்குப்புறச் சுவரில் இருக்கின்றன. இவைகளின் தலைப்பில் மேற் குறித்த பெயர்கள் செதுக்கப்பெற்றுள்ளன, உருத்திரதேவர், இராகு கேதுக்கள், நாரதர், அளகேஸ்வரன், சந்திரன், கிரியாசத்தி, சனி பகவான், வாயுபகவான் இவர்களின் திருமேனிகள் இக்கோபுர வாசலுக்கு வடபால் கிழக்குப் புறச்சுவரில் இருக்கின்றன. இவைகளின் தலைப்பில் மேற்குறித்த பெயர்கள் தீட்டப்பெற்றுள்ளன. க்ஷேத்திர பாலப்பிள்ளையார், கங்காதேவி, தனவந்தரி,