பக்கம் எண் :

186
 

தொண்டைமான் என்பதை இக் கல்வெட்டு உணர்த்துகிறது.

கிழக்குக் கோபுரத்திற்குத் தென்பால் இருந்த மண்டபம்:

இராசாக்கள் தம்பிரான் திருமாளிகையில் கிழக்கு எழுநிலைக் கோபுரத்திற்குத் தென்பால் ஒரு மண்டபம் இருந்தது. அதற்கு 'யானை ஏற்றுக் கூடம்' என்று பெயர். இச்செய்தி மாறவர்மன் திரிபுவனச் சக்கரவர்த்தி விக்கிரமபாண்டியனின் நான்காம் ஆண்டுக் கல்வெட்டில் குறிக்கப்பெற்றுள்ளது.

திருநோக்கழகியான் திருமடம்:

இது சுந்தரபாண்டியன் திருநிலையெழுகோபுரச் சந்நிதியில் சொக்கச்சீயன் குறளில் கீழ்ப்பக்கத்தில் இருந்தது. இதற்கு மடப்புறமாக நிலம் அளிக்கப்பெற்றிருந்தது.

திருஞானசம்பந்தர் திருக்கோயில்:

திருஞானசம்பந்தர்க்குச் சிதம்பரம் கோயிலில் ஒரு தனி ஆலயம் இருந்ததை மாறவர்மன் திரிபுவனச்சக்கரவர்த்தி வீரபாண்டியதேவரின் கல்வெட்டுப் புலப்படுத்துகின்றது.

பெரிய திருச்சுற்று மாளிகை:

இக்கோயிலுக்குரிய பெரிய திருச்சுற்றுமாளிகையை அமைத்தவன் மணவில் கூத்தனான காலிங்கராயன் ஆவன். இது அவன் தில்லைக்குச் செய்த திருப்பணியைப்பற்றிக் கூறும் பாடல் ஒன்றில் குறிக்கப்பெற்றுள்ளது.

திருநாவுக்கரசு தென் திருமடம்:

இது அம்பலநாயகப்பெருந் தெருவில் இருந்தது. இத்திரு மடத்துக்கு அருகில் அழகிய திருவையாறுடையார் கோயிலும் இருந்தது. இக்கோயிலின் கீழ்ப்பக்கத்து முகக் கட்டணத்தில் எழுந்தருளியிருந்த பிள்ளையாரின் பெயரும் குலோத்துங்க சோழ விநாயகப் பிள்ளையாராகும். நாயகர் இராசாக்கள் தம்பிரான் திருவீதியில் எழுந்தருளும்போது இப்பிள்ளையாரைத் திருக்கண் சாத்தி அருளுதல் உண்டு.