பக்கம் எண் :

187
 

கீழக் கோபுரப் பாடல்களின் குறிப்புக்கள்:

சுந்தரபாண்டியன் துலாபாரம் புக்க கதையும், வாணர் தலைவனைக் காட்டிற்குத் துரத்தியதையும், தெலுங்கர் சேனையைத் துகளாக்கியதையும், வெள்ளாற்றில் நடைபெற்ற போரில் புவனேக வீரன் வெற்றி பெற்றதையும் இங்குள்ள கல்வெட்டுப் பாடல்கள் குறிப்பிடுகின்றன.

மேற்குக் கோபுரத்தில் உள்ள கல்வெட்டுப் பாடல்:

விக்கிரம பாண்டியன் வேணாடு (திருவாங்கூர்) கொங்கு தேசம் இவைகளை வென்றதையும் கண்ட கோபாலனைக் கொன்றதையும் குறிப்பிடுகின்றது.

தெற்குக் கோபுரத்தை ஒட்டித் தென்பால்
நிறுத்தப்பெற்றிருக்கும் கல்லில் உள்ள கல்வெட்டு:

வையப்ப கிருட்டிணப்பநாய்க்கர் மகன் முத்துகிருட்டிணப்ப நாய்க்கரால் கொள்ளிடப் பேராற்றங்கரையில் சகம் 1520இல் (கி. பி. 1598) ஒரு மண்டபம் கட்டியதை உணர்த்துகிறது.

வீதிகள்:

இக்கோயில் கல்வெட்டுக்களில் திருநிலை எழுகோபுரப் பெருந்தெரு, முடித்தலைகொண்டபெருமாள் திருவீதி, சுந்தரபாண்டியன் தெங்குத் திருவீதி, விக்கிரமசோழன்தெங்குத் திருவீதி, அம்பலநாயகப் பெருந்தெரு, இராசாக்கள் தம்பிரான் திருவீதி என்னும் பெயர்கள் குறிக்கப்பெற்றுள்ளன. இவைகளுள் முடித்தலைகொண்ட பெருமாள் திருவீதி என்பது மேற்குவீதியின் பெயராகும். விக்கிரம சோழன்தெங்குத் திருவீதி என்பது மாசிக்கடலாடநாயகர் எழுந்தருளும் வீதியாகும். இச்செய்தி "நாயகர் திருக்கடலுக்கு எழுந்தருளும் தெங்குத் திருவீதி தென்பக்கத்து எழுந்தருளுவித்த பிடாரி திருச் சிற்றம்பல மாகாளி ஸ்ரீகோயிலும், திருமுற்றமும், திருமடை விளாகத்திலும் அகப்பட்ட" என்னும் கல்வெட்டுப் பகுதியால் அறியக் கிடக்கின்றது.