அறச்சாலைகள்: சிங்களாந்தகன் அறச்சாலை:- இது இவ்வூரில் முதலாம் இராஜேந்திரசோழர் அணுக்கிநக்கன் பரவையாரால் ஏற்படுத்தப்பெற்ற சாலையாகும். இதில் நாடோறும் இருபத்தைந்து பிராமணர்கள் உண்ணுவதற்கு நிவந்தமாக இப்பெரும்பற்றப்புலியூர்க்கு அருகில் பரவை நங்கை நல்லூரில் பதினைந்தரைவேலி நிலத்தை வாங்கி இச்சாலைக்கு இவ்வம்மையார் விட்டிருந்தனர். இந்நிலத்தில் ஐந்தரைவேலி நிலம் பயிர் செய்யத் தகுதியற்றதாய் இருந்தது. அது நீக்கி எஞ்சிய பதிற்றுவேலி நிலத்தால் வந்த நெல்லைக் கொண்டு இவ்வறச்சாலை நடத்தப்பெற்றுவந்தது. இச்சாலையில் சமையல் செய்து வந்தவன் 'சாலைமடையன்' என்னும் பேரால் குறிக்கப் பெற்றுள்ளான். அவனுக்கு நாள் ஒன்றுக்கு நெல் அறுநாழியும், ஆண்டு ஒன்றுக்குப் புடவைக்கு எண்கலமும் கொடுக்கப்பட்டுவந்தன. இச்சாலை செவ்விதில் நடைபெறுகின்றதா என்றதைப் பார்த்து வந்தவன் 'அறதேயன்' என்னும் பெயரால் குறிக்கப் பெற்றுள்ளான். அறப்பெருஞ்செல்வி சாலை: மேலைவீதியாகிய முடித்தலைக்கொண்ட பெருமாள் திருவீதியில் இருந்தது. இச்செய்தியைத் திரிபுவனச்சக்கரவர்த்தி இராஜராஜதேவரின் 17 ஆம் ஆண்டில் பொறிக்கப்பெற்ற கல்வெட்டு உணர்த்துகின்றது. சுந்தரபாண்டியன் சாலை: இது சுந்தரபாண்டியனுடைய ஏழாம் ஆண்டுக் கல்வெட்டில் குறிக்கப்பெற்றுள்ளது. இதில் உணவு அளிப்பதற்கு அம்மன்னனால் நிவந்தம் அளிக்கப்பெற்றுள்ளது. திருத்தோப்பு: இவ்வூரில் குலோத்துங்க சோழன் திருத்தோப்பு, சுந்தரபாண்டியன் திருத்தோப்பு, எதிரிலிசோழன் திருத்தோப்பு என்னும் பெயருடைய தோப்புகள் இருந்தன. இவற்றுள் குலோத்துங்க சோழன் திருத்தோப்புக்கு நாயகர் ஏறியருளுதல் உண்டு. அங்ஙனம் ஏறி அருளி னால் சுவஸ்திசொல்லி சேவிக்கவும், இத்திருத்தோப்பில் திருமஞ்சனம் பண்ணி அருளும்போது அத்தியயனம் பண்ணுவதற்கும் பிறவற்றிற்கு மாகப் பத்துவேலி நிலங்கள் நிவந்தமாக அளிக்கப் பெற்றிருந்தன.
|