சுந்தரபாண்டியன் திருத்தோப்பு: "சுந்தரபாண்டியன் திருத்தோப்புச்செய்து ஏறி அருளவேண்டுவனவுக்கும், விருதராஜ பயங்கர வளநாட்டு ஆற்றூரான இராஜநாராயண சதுர்ப்பேதி மங்கலத்து" என்னும் சுந்தரபாண்டிய தேவரின் கல்வெட்டுப்பகுதி, இவ்வூரில் இப்பெயருடைய தோப்பு ஒன்று இருந்ததைப் புலப்படுத்துகின்றது. எதிரிலிசோழன் திருத்தோப்பு: இத் திருப்பெயருடைய தோப்பு ஒன்று திரிபுவனச்சக்கர வர்த்தி இராஜராஜதேவரின் இருபத்தாறாம் ஆண்டுக் கல்வெட்டில் குறிக்கப்பெற்றுள்ளது. இத்தோப்புக்குச் செல்லும் தெருவில் ஒரு மடம் ஒன்றையும் அக்கல்வெட்டுக் கூறுகின்றது. வழியடிமைகொண்டான் தோப்பு: இத் தோப்பு இருபதுமா பரப்புடையது. இது விக்கிரமபுரத்தில் உள்ளது. இத்தோப்பு ஆளுடைய நாயனாற்காகக் கோப்பெருசிங்க தேவரின் 19-ஆம் ஆண்டில் விடப்பெற்றது. பெரும்பற்றப்புலியூரைச் சூழ்ந்துள்ள ஊர்கள்: தில்லைநாயக நல்லூர்: இது கடவாய்ச்சேரி என்னும் வேறுபெயரை உடையது. இது பெரும்பற்றப்புலியூரின் தென்பிடாகை ஆகும். (பிடாகை = சிற்றூர்) இவ்வூரில் குலோத்துங்க சோழன் தெற்குத் திருவீதி, கோப்பெருஞ்சிங்கன் திருவீதி, ராஜாக்கள் தம்பிரான் திருவீதி, எனத் தெருக்களுக்குப் பெயர்கள் இடப்பெற்றிருந்தன. இவ்வூரில் சாலியர்கள் குடியிருப்பதற்குத் திருவம்பலப்பெருமாள்புரம் என்னும் சிவநாமத்தால் தெரு ஒன்று ஏற்படுத்தப் பெற்றிருந்தது. அத்தெருவில் வசித்து வந்த சாலியர்கள், கோயிலுக்கும், திருக்காமக்கோட்டமுடைய பெரிய நாச்சியார்க்கும் சாத்தும் பரிவட்டத்திற்கும் வழக்கத்திற்கு 25 இட்டு வந்தனர்.
|