இளநாங்கூர்: இது பெரும்பற்றம்புலியூரின் மேல்பிடாகை ஆகும். இவ்வூர்க்கல்வெட்டில் கங்கைகொண்ட சோழப்பேரிளமை நாட்டு இளநாங்கூரான சுந்தரசோழ பாண்டியநல்லூர் எனக் குறிக்கப்பெற்றுள்ளது. எருக்காட்டுச்சேரி: இது பெரும்பற்றப்புலியூரின் கீழ்ப்பிடாகை ஆகும். இவ்வூர் கிடாரங்கொண்ட சோழப்பேரிளமைநாட்டு எருக்காட்டுச்சேரியான ஜயங்கொண்ட சோழநல்லூர் எனக் குறிக்கப்பெற்றுள்ளது. குமாரமங்கலம்: இதுவும் பெரும்பற்றப் புலியூரின் கீழ்ப்பிடாகை ஆகும். இது கிடாரங்கொண்ட சோழப் பேரிளமைநாட்டுக் குமாரமங்கலமானதில்லை அழக நல்லூர் எனக் கல்வெட்டில் கூறப்பட்டுள்ளது. கொற்றங்குடி: இது பெரும்பற்றப்புலியூரின் கீழ்ப்பிடாகை ஆகும். இது கொற்றங்குடி ஆனபவித்திரமாணிக்கநல்லூர் என்று கல்வெட்டில் கூறப்பெற்றுள்ளது. நல்லாலி: இது பெரும்பற்றப்புலியூரின் பிடாகை ஆகும். இதற்குவிக்கிரம சோழநல்லூர் என்ற வேறு பெயரும் உண்டு. கோயில்பூண்டி: இக்காலம் கோயிலாம்பூண்டி என்று வழங்கப் பெற்று வருகின்றது. இதற்கு க்ஷத்திரிய சிகாமணிநல்லூர் என்ற வேறு பெயரும் உண்டு. மிதுனக்குடி: இது பெரும்பற்றப்புலியூரின் பிடாகையைச் சேர்ந்ததாகும். இதற்குத் தானவிநோதநல்லூர் என்ற வேறு பெயரும் உண்டு.
|