பார்வதிநல்லூர், சண்டிகேசுவரநல்லூர், மகிபால குலகால நல்லூர், முதலான ஊர்களும் இப்பெரும்பற்றப்புலியூரைச் சூழ்ந்து இருந்தன. இங்ஙனம் ஊர்களுக்கு இறைவன், இறைவி இவர்களுடைய பெயர்களும், அரசர்களுடைய பெயர்களும் வைக்கப் பெற்றிருந்தன. திருநந்தவனங்கள்: இக்கோயிலுக்கு அளிக்கப்பெற்ற நிவந்தங்களில் திருநந்த வனப்புறங்கள்தான் மிகுதியாகும். கோப்பெருஞ்சிங்க தேவரின் பன்னிரண்டாவது ஆட்சி ஆண்டில் நடுநிலைநாடான இராஜராஜ வளநாட்டில் வெள்ளாற்றிற்கு வடகரையில் ஆலம்பாடியான குலோத்துங்க சோழநல்லூர்ப் பிடாகை வீரநாராயணநல்லூரில் "தொடர்ந்து அடிமை கொண்டான்" என்ற திருநாமத்தால் திருநந்தவனம் செய்து திருப்பள்ளித் தாமம் ஆக்க பத்துமா நிலம் விடப்பட்டிருந்தது. பாண்டிமண்டலத்தில் தென்வளத்திருக்கை என்னும் ஊரில் வசித்து வந்த ஆட்கொண்டானாகிய நாராயணதேவன் பல்லவரையன் பெரும்பற்றப்புலியூர்ப்பிடாகை எருக்காட்டுச் சேரியில் நந்தவனத்திற்கு நிலம் வாங்கி அளித்திருந்தனன். இது வீரபாண்டியதேவன் கல்வெட்டால் புலப்படுகின்றது. மாறவர்மன் திரிபுவனச்சக்கரவர்த்தி வீரகேரளனாகிய குலசேகரதேவரின் நான்காமாண்டுக் கல்வெட்டி னால் மலையமண்டலத்துப் பள்ளிக்கோடு என்ற ஊரில் இருந்து வந்த ஒருவர் இங்கே நந்தவனத்திற்கு நிலம் அளித்திருந்த செய்தியைக் கூறுகின்றன. தெற்கு இராதாதேசத்தில் இருந்த உடையார் ஈசுவரசிவர் திருப்பள்ளித்தாமம் ஆக்க நிவந்தம் அளித்திருந்தனர். "இராதா தேசம்" என்பது வங்காள மாகாணத்தில் உள்ளதாகும். மூன்றாங் குலோத்துங்க சோழன் காலத்தில் சயங்கொண்டசோழமண்டலத்துப் புலியூர்க்கோட்டத்துக் குன்றத்தூர் நாட்டுக் குன்றத்தூர் வெண்குளப் பாக்கிழான் அரையன் தில்லைநாயகன் தன் பெயரால் தில்லைநாயகன் திருநந்தவனம் செய்யவும், செய்யும் நால்வர்க்கு நிலமும் வாங்கி விட்டிருந்தான். இங்ஙனம் வேற்று நாட்டார்களும் நந்தவனங்களுக்கு நிவந்தங்களை ஏற்படுத்தியிருந்தனர். திருப்பாவாடைப்புறம்: திருப்பாவாடை என்பது கடவுள் திருமுன் ஆடையில் படைக்கும்
|