பக்கம் எண் :

192
 

அன்னம். புறம் என்பது நிவந்தம். இதன் பொருட்டுப் புவலோகமாணிக்கவளநாட்டுப் பார்வதி நல்லூரில் நிலம் அளிக்கப் பெற்றிருந்தது. இதுபோன்று அளிக்கப்பெற்ற நிவந்தங்கள் பல.

திருச்சிற்றம்பலமாகாளி:

இத் திருச்சிற்றம்பலமாகாளி பிடாரி திருச்சிற்றம்பலமாகாளி என்றும் கல்வெட்டில் குறிக்கப்பெற்றுள்ளனர். இவருடைய கோயில் திருமுற்றமும் திருமடைவிளாகமும் உடையதாய்த் திகழ்ந்தது. இக்காலம் திருமடைவிளாகம் காணப்படவில்லை.

இவரது கோயில் நாயகர் திருக்கடலுக்கு எழுந்தருளும் விக்கிரமசோழன் தெற்குத் திருவீதித் தென்பக்கத்து பள்ளிப்படையான விக்கிரமசோழநல்லூரில் அமைந்திருந்தது. பள்ளிப்படையானது இறந்த அரச குடும்பத்தாரைப் புதைக்கும் இடமாகும். சடாவர்மன் சுந்தரபாண்டியனுடைய பதினான்காம் ஆண்டுக் கல்வெட்டில் இது அக்கன் பள்ளிப்படை எனக் குறிக்கப்பெற்றுள்ளது.

விக்கிரம சோழனின் தமக்கையார் இறந்தபின் இங்குப் புதைக்கப்பெற்ற காரணம்பற்றி இப்பெயர் பெற்றதாதல் வேண்டும். இத் திருச்சிற்றம்பலமாகாளி கோயிலிலும் கல்வெட்டுக்கள் இருக்கின்றன.

திருச்சிற்றம்பலம் பொன்வேய்ந்த வரலாறு:

திருச்சிற்றம்பலத்தில் ஆனந்தத் தாண்டவம் செய்தருளும் நடராஜப்பெருமான் சோழ மன்னர்களின் குலதெய்வமாவர். இச்செய்தி "தன்குல நாயகம் தாண்டவம் பயிலும் செம்பொன் அம்பலஞ்சூழ் திருமாளிகையும்" என்னும் திருமழபாடிச் சிவன்கோயிலில் பொறிக்கப்பெற்றுள்ள விக்கிரமசோழனின் கல்வெட்டுப் பகுதியால் அறியக்கிடக்கின்றது. மேலும் இச் சிதம்பரம் சோழமன்னர்களின் முடி சூட்டு நகரங்களிலும் ஒன்றாகும். இது "இராச கேசரிபன்மரான திரி புவனச் சக்கரவர்த்திகள் 'தில்லைத் திருநகர் சிறப்புடைத்தாகத் திருமுடி சூடிய' ஸ்ரீகுலோத்துங்க சோழதேவர்க்கு யாண்டு எட்டாவது" எனத் தொடங்கும் திருமாணிகுழிக் கல்வெட்டுப் பகுதியால் விளங்கும்.

இங்ஙனம் சோழமன்னர்களுக்குச் சிறப்புடையதாய் உள்ள திருச்சிற்றம்பலத்திற்கு அம் மன்னர்கள் பொன்வேய்ந்து பொலிவு செய்தனர். அங்ஙனம் முதன் முதல் பொன்வேய்ந்தவர் முதலாம் ஆதித்தசோழனின்