முந்து முறைமையிற் பயின்று முதிர அறிவு எதிரும் வகை. மைந்தனார் மறுஒழித்த இளம்பிறைபோல் வளர்கின்றார்' (தி.12 திருநாவு - 1291) எனவும், 'அங்கவரும் அமண் சமயத்தருங்கலை நூலான வெலாம், பொங்கும் உணர்வுறப் பயின்றே அந்நெறியிற் புலன்சிறப்ப" (தி.12 திருநாவு- 1309) எனவும் இப்பெருந்தகையாருடைய கலைப்பயிற்சியையும், ஆழ்ந்த புலமையையும் விளக்கிய சேக்கிழார் 'உலகின்கண் ஒளிஉடைய வித்தகராய்' என்று முடிவு போக்கியுள்ளமை இங்கு அறியத்தக்கதாகும். இவ்வாறு பலகலைகளையும் நன்கு உணர்ந்த இப்பெருந்தகையார் தம் அருட்டிறத்தால் அக்கலைகளையும், அவற்றான் சிறந்து தோன்றும் தமிழையும் சிவபரம்பொருளாகக் கண்டு சிந்தை கனிந்து பாடுகின்றார்; அவ்வமுதப்பாடற் பகுதிகள் கலைகளின் மாட்டும், தமிழின் மாட்டும் அடிகள் கொண்டிருந்த அயராவன்பை விளக்குவ தாகும். "இளம்பிறையும் முதிர்சடைமேல் வைத்தான் கண்டாய் எட்டெட் டிருங்கலையு மானான் கண்டாய்" | (தி.6. ப.73. பா.9) |
கல்வி ஞானக் கலைப்பொரு ளாயவன் செல்வ மல்கு திருக்கானூரீசனை எல்லியும் பகலும் இசைவானவா சொல்லிடீர் நுந் துயரங்கள் தீரவே" | (தி.5. ப.76. பா.6.) |
"மூலநோய் தீர்க்கும் முதல்வன் கண்டாய் முத்தமிழும் நான்மறையும் ஆனான்கண்டாய்" | (தி.6. ப.23. பா.9) |
"வானவன்காண் வானவர்க்கு மேலா னான்காண் வடமொழியும் தென்தமிழும் மறைகள் நான்கும் ஆனவன்காண் ..." | (தி.6. ப.87. பா.1) |
"ஆரி யந்தமி ழோடிசை யானவன் கூரி யகுணத் தார் குறி நின்றவன்" | (தி.5. ப.18. பா.3) |
|