55. திருக்கயிலாயம் பதிக வரலாறு: சுவாமிகள் கயிலை செல்லும் காதல் கொண்டு திருக்காளத்தியினின்றும் புறப்பட்டுத் திருப்பருப்பதம் வணங்கி, தெலுங்கு, கன்னடம், மாளவம், இலாடம், மத்தியம் ஆகிய நாடுகளைக் கடந்து வாரணாசி சென்று தொழுது கற்சுரத்தை அடைந்து செல்லுகையில் கால்கள் தேய்ந்தமையால் கைகளை ஊன்றிச் செல்ல, அவைகளும் தேய்ந்தன, பின்பு, மார்பால் உந்தியும் புரண்டும் சென்றார். அதனால் அவ்வுறுப்புக்களும் அழிந்தன. ஆகவே, கயிலைமால்வரையின் தாழ்வரையில் செயலின்றிக்கிடந்தார். சுவாமிகளது நிலைக்கு இரங்கிய கயிலைப் பரமர் அவர் கயிலையை அணைவதற்கு அருளாராய் ஓர் முனிவராகி எதிர்தோன்றி, 'உம் உறுப்புக்களழிய இப்பாலையில் வந்தது என் கருதி' என வினவினார். "மலைமகளுடன் வடகயிலை அண்டர் நாயகர் இருக்கும் அப்பரிசு அடியேன் கண்டு கும்பிடக் காதலின் அடைந்தேன்; ஆளும் நாயகன் கயிலையிலிருக்கை கண்டல்லால் மாளும் இவ்வுடல் கொண்டு மீளேன்' என்றார்கள் சுவாமிகள். இறைவர் சுவாமிகளது மன உறுதியைக் கண்டு அருகிலுள்ள பொய்கையைக் காட்டி, 'இப்பொய்கையில் மூழ்கி நம்மை நீ கயிலையிலிருந்த அம்முறையைத் திருவையாற்றிற்காண்' எனப் பணித்துமறைந்தருளினார். சுவாமிகள் தீங்கு நீங்கிய திருமேனியுடன் இறையருளாணையின் வண்ணம் திருக்கயிலையில் உள்ள பொய்கையில் ஐந்தெழுத்தோதி மூழ்கி ஐயாற்றில் ஓர் வாவியில் உலகெலாம் வியப்ப எழுந்து, வெள்ளி வெற்பின்மேல் மரகதக் கொடியுடன் விளங்கும் வள்ளலார் கயிலையிலிருந்த கோலம் கண்டு தொழுது பாடியருளியன இது முதல் மூன்று திருப்பதிகங்கள். கயிலை மலையானையே போற்றியருளியதால் இவைமூன்றும் கயிலைத் திருப்பதிகங்களே ஆயின (தி.12 திருநாவு. புரா. 381). சுவாமிகள் பொய்கையில் மூழ்கியதைக் குறிக்குமிடத்தில் (370) சேக்கிழார், "வேற்று மாகிவிண் ணாகிநின் றார்மொழி விரும்பி" என்றது, விண்ணிலே மறைந்து அருள் புரிந்த நிலையை நினைந்து மூழ்கி, அந்நினைவோடே ஐயாற்றில் எழுந்து தாண்டகம் தொடங்கி அருளினார் என்றற்கு என்க.
|