| 2643. | இமையா துயிரா திருந்தாய் போற்றி | | | என்சிந்தை நீங்கா இறைவா போற்றி | | | உமைபாக மாகத் தணைத்தாய் போற்றி | | | ஊழியே ழான வொருவா போற்றி | | | அமையா வருநஞ்ச மார்ந்தாய் போற்றி | | | ஆதி புராணனாய் நின்றாய் போற்றி | | | கமையாகி நின்ற கனலே போற்றி | | | கயிலை மலையானே போற்றி போற்றி. | 8 |
ஆனவனே! என் உள்ளத்தை நீங்காத தலைவனே! விண்ணும் தீயும் நிலனும் ஆகியவனே! மேலார்க்கும் மேலாயவனே! கண்ணின் மணி போன்ற அருமையானவனே! கயிலை மலையானே! உனக்கு வணக்கங்கள் பல. கு-ரை: பண், ஏழிசைகளது கூட்டத்தானே பிறத்தலின், பண் பருப்பொருளும், இசை நுண்பொருளுமாம்; அதனால், "பண்ணின் இசையாகி நின்றாய்' என்றருளிச் செய்தார். பாவிப்பார் - நினைப்பார் - எண், அளவை; 'எழுத்துச் சொல்லும்' என உம்மையை மாறிக் கூட்டுக. எழுத்தும் சொல்லும் மொழியின் பகுதிகள். விண் முதலிய மூன்றனைக் கூறவே, ஏனைய இரண்டுங் கொள்ளப்படும். மேலவர் - தேவர். கண்ணினிடத்து உயிராய் நின்று காட்சியை விளைப்பது கருமணியே யாதலின். "கண்ணின் மணியாகி நின்றாய்" என்றருளினார். 8. பொ-ரை: ஏனைய உயிர்களைப் போல இமைக்காமல் மூச்சுவிடாமல் இருப்பவனே! என் உள்ளத்தை நீங்காத தலைவனே! பார்வதி பாகனே! பல ஊழிகளையும் கடந்தவனே! பொருந்தாத கொடிய விடத்தை உண்டவனே! முதற் பழையோனே! பொறுமையாகச் செயற்படும் ஞான ஒளி உடையவனே! கயிலை மலையானே! உனக்கு வணக்கங்கள் பல. கு-ரை: இமைத்தல், உயிர்த்தல் முதலியன உடம்பொடு கூடியே விளங்குவதாகிய உயிரின் செயல்களாதலின், 'இமையாது உயிராது இருந்தாய்' என்றது, 'தானே விளங்கும் இயல்புடைய கடவுளே' என்றவாறாம். "ஏழ்" என்றது, 'பல' என்றவாறு. அமையா - உடம்பொடு பொருந்தாது அதற்குப் பகையாய் நிற்கும். ஆர்ந்தாய் - உண்டவனே. ஆதி புராணன் - முதற் பழையோன்; தன்னிற் பழையோர் இல்லாதவன் என்றவாறு; 'முதல்வனும்
|