பக்கம் எண் :

905
 
2644.மூவாய் பிறவாய் இறவாய் போற்றி

முன்னமே தோன்றி முளைத்தாய் போற்றி

தேவாதி தேவர்தொழுந் தேவே போற்றி

சென்றேறி யெங்கும் பரந்தாய் போற்றி

ஆவா அடியேனுக் கெல்லாம் போற்றி

அல்லல் நலிய அலந்தேன் போற்றி

காவாய் கனகத் திரளே போற்றி

கயிலை மலையானே போற்றி போற்றி.

9

பழையவனுமாய் நின்றவனே' என்றுரைத்தலும் ஆம். கமை - பொறுமை; அருள்; கனல் போலும் திருமேனியுடைமைபற்றி, 'கனலே' என்பார், 'அருளுடைய தொரு கனலே' என வியந்தருளிச் செய்தார்.

9. பொ-ரை: மூத்தலோ பிறத்தலோ இறத்தலோ இல்லாது எல்லாப் பொருள்களுக்கும் முற்பட்டு என்றும் இயற்கையாகவே விளங்கும் தேவர் தலைவரும் தொழும் தெய்வமே! எங்கும் பரவியிருப்பவனே! ஐயோ! என்று வருந்தும் அடியேனுக்கு எல்லாமாய் இருக்கும் பெருமானே! கனகத்திரள் போல்பவனே! கயிலை மலையானே! அடியேன் துயரங்கள் வருத்த வருந்துகின்றேன். என்னைக் காப்பாயாக. உனக்கு வணக்கங்கள் பல.

கு-ரை: மூவாய் - மூப்படையாதவனே; என்றது, 'காலத்தால் தாக்குண்ணாதவன்' என்றதாம். பின்தோன்றுதலிற் பிரித்தலின், "முன்னமே" என்னும் ஏகாரம் பிரிநிலை. "எல்லாப் பொருட்கும் முன்னமே' என்க. 'முளைத்துத் தோன்றினாய்" என மாற்றி, 'உளனாய் விளங்கினாய்' என்றுரைக்க. இயற்கையாகவே விளங்குபவனை, செயற்கையாக முளைத்தவன் போல அருளியது பான்மை வழக்கு. "தே" என்பது 'தெய்வங்கள்' எனவும், 'ஆதி தேவர்' என்பது காரணக் கடவுளர் எனவும் பொருள் தரும். "தே ஆதிதேவர்" என்றது செவ்வெண். 'எங்கும் சென்று ஏறிப் பரந்தாய்' என்க. "சென்று" என்றதும், செல்லாததனைச் சென்றதுபோலக் கூறியதாம். ஆவா, வியப்பிடைச் சொல். 'அடியேனுக்கு எல்லாப் பொருளுமாய் இருப்பவனே; 'ஆவாய்' என்பது சொல்லெச்சம். 'ஆவாய் அடியேனுக்கு எல்லாம்' என்பதே பாடம் எனலுமாம். சுவாமிகளுக்கு இறைவன் எல்லாம் ஆயினமையை, பின்வரும் 'அப்பன் நீ அம்மை நீ" என்னும் திருத்தாண்டகத்தால் அறிக. நினக்கு