பக்கம் எண் :

913
 
2651.மைசேர்ந்த கண்ட மிடற்றாய் போற்றி

மாலுக்கும் ஓராழி யீந்தாய் போற்றி

பொய்சேர்ந்த சிந்தை புகாதாய் போற்றி

போகாதென் னுள்ளத் திருந்தாய் போற்றி

மெய்சேரப் பால்வெண்ணீ றாடீ போற்றி

மிக்கார்க ளேத்தும் விளக்கே போற்றி

கைசே ரனலேந்தி யாடீ போற்றி

கயிலை மலையானே போற்றி போற்றி.

5


செய்தலும், வேண்டுமிடத்து, அவற்றை அடியோடு ஆற்றல் கெடச் செய்தலுமாம். அவற்றது ஆற்றலைக் கெடுத்தருளினமையை, சுவாமிகளுக்கு அமணர் தந்த நஞ்சு யாதும் செய்யா தொழிந்தமை முதலியவற்றின் அறிக. எரி வீசும் - எரியைக் போல ஒளிவிடுகின்ற. "வீசும்", வீசுதற்கு இடமாய் உள்ள; 'ஏந்தியுள்ள' என்றுமாம். படரும் - விரிந்த. பல்கணம். பூதகணங்களே யன்றி, பதினெண்கணங்களும் என்க. கணக் கூத்து, கணங்களின் இடையிற் செய்யப்படும் கூத்து. கூத்தப்பிரான் - நடராசன். சுடரின் - விளக்குப் போல. 'அவ்வாறு (விளக்குப் போலத்) தோன்றி' என எடுத்துக்கொண்டுரைக்க. இறைவன் உள்ளமாகிய வெளியில் சுடர்போலத் தோன்றுதலை உணர்ந்து வழிபடும் முறையை. 'தகரவித்தை' என உபநிடதம் கூறுதலை மேலே (ப.16. பா.17) குறித்தாம். கடலில் ஒளி ஆய - கடலினுள் ஒளிதலை (மறைந்திருத்தலை) உடைய; என்றது, 'ஆழ்ந்தும் அகன்றும் நுணுகியுணரும் பேரறிவாளர்க்கே கிடைப்பவன்' என்றபடி.

5. பொ-ரை: நீலகண்டனே! திருமாலுக்குச் சக்கரம் ஈந்தவனே! ஐயம் திரிபுகள் உள்ள உள்ளங்களில் புகாதவனே! என் உள்ளத்தே நீங்காது இருப்பவனே! உடல் முழுதும் வெள்ளிய நீறு பூசியவனே! சான்றோர்கள் போற்றும் ஞானதீபமே! கையில் அனலை ஏந்திக் கூத்து நிகழ்த்துபவனே! கயிலை மலையானே! உனக்கு வணக்கம் பல.

கு-ரை: மை - கருநிறம். பொய், ஐய விபரீதங்கள். பால் வெண்ணீறு - பால்போலும் வெள்ளிய திருநீறு. மிக்கார் - உயர்ந்தோர். 'விளக்கு" என்றது, பொருள் சேர்ந்த புகழுடைமை பற்றி. கைசேர் அனல் ஏந்தி ஆடீ - கையின் கண் பொருந்தியுள்ள நெருப்பினை விடாது ஏந்தி நின்றே ஆடுகின்றவனே.