பக்கம் எண் :

914
 
2652.ஆறேறு சென்னி முடியாய் போற்றி

அடியார்கட் காரமுதாய் நின்றாய் போற்றி

நீறேறு மேனி யுடையாய் போற்றி

நீங்காதென் னுள்ளத் திருந்தாய் போற்றி

கூறேறு மங்கை மழுவா போற்றி

கொள்ளுங் கிழமையே ழானாய் போற்றி

காறேறு கண்ட மிடற்றாய் போற்றி

கயிலை மலையானே போற்றி போற்றி.

6

2653.அண்டமே ழன்று கடந்தாய் போற்றி

ஆதி புராணனாய் நின்றாய் போற்றி

பண்டை வினைக ளறுப்பாய் போற்றி

பாரோர்விண் ணேத்தப் படுவாய் போற்றி

தொண்டர் பரவு மிடத்தாய் போற்றி

தொழில்நோக்கி யாளுஞ் சுடரே போற்றி

கண்டங் கறுக்கவும் வல்லாய் போற்றி

கயிலை மலையானே போற்றி போற்றி.

7


6. பொ-ரை: கங்கைச் சடையனே! அடியார்களுக்கு ஆரமுதே! நீறு பூசிய மேனியனே! நீங்காது என் உள்ளத்து இருப்பவனே! கையில் கூரிய மழுப்படையை ஏந்தியவனே! ஏழு கிழமைகளாகவும் உள்ளவனே! நீலகண்டனே! கயிலை மலையானே! உனக்கு வணக்கம் பல.

கு-ரை: முடி - சடைமுடி. 'கூரேறு, காரேறு' என்பன, எதுகை நோக்கித் திரிந்தன. "கூறேறு" என்பதற்கு, 'கூறு செய்தல் பொருந்திய' என்றுரைத்தலுமாம். "கூரேறு"; "காரேறு" என்றே பாடம் ஓதுவாரும் உளர். கொள்ளும் கிழமை - கணிநூல் வழியாற் கொள்ளப்படும் கிழமைகள். 'ஏழும்' என்னும் உம்மை தொகுத்தலாயிற்று. "கிழமை ஏழானாய்" என்றதனால், கோளும் நாளும் அடியாரை வந்து நலியாமை பெறப்பட்டது, காறேறு கண்ட - கருமை பொருந்துதல் காணப்பட்ட. "கண்ட மிடறு" ஒரு பொருட் பன்மொழி என்றலுமாம்.

7. பொ-ரை: ஏழுலகம் கடந்தவனே! ஆதிப்பழம் பொருளே! பழையவினைகளை நீக்குபவனே! மன்னவரும் விண்ணவரும் போற்றும் மூர்த்தியே! அடியார்கள் போற்றும் திருத்தலங்களில் உறைபவனே! வழிபாட்டினை நோக்கி அடியவர்களை ஆளும் ஒளியே! நீலகண்டனே! கயிலை மலையானே! உனக்கு வணக்கம் பல.