பக்கம் எண் :

915
 
2654. பெருகி யலைக்கின்ற ஆறே போற்றி

பேராநோய் பேர விடுப்பாய் போற்றி

உருகிநினை வார்தம் முள்ளாய் போற்றி

ஊனந் தவிர்க்கும் பிரானே போற்றி

அருகி மிளிர்கின்ற பொன்னே போற்றி

யாரு மிகழப் படாதாய் போற்றி

கருகிப் பொழிந்தோடு நீரே போற்றி

கயிலை மலையானே போற்றி போற்றி.

8


கு-ரை: 'அன்றே' என்னும் பிரிநிலை ஏகாரம் தொக்கது; அன்றே - அநாதியே. "ஆதிபுராணன்" என்பதற்கு முன்னைத் திருப்பதிகத்துள் உரைக்கப்பட்டது. பண்டை வினைகள் - பல பிறவிகளிற் செய்த வினைகள்; இவற்றை, 'சஞ்சிதம்' என்ப. "பாரோர்" என்றவாறே, 'விண்ணோர்' என்க. பரவும் இடம் - திருக்கோயிலுள்ளிருக்கும் திருமேனி; அவைகளை, 'கும்ப விம்ப தம்பம் முதலாயின' என்பர். கும்பம் - குடம் (கலசம்). விம்பம் - விக்கிரகம். தம்பம் - இலிங்கம். முதலாயின, வேள்வித் தீ திருமுறை முதலியன. 'இவ்வாதாரங்களில் வைத்து வழிபடும் அடியவர்கட்கு, அவரது அன்பு நோக்கி அவ்விடங்களில் தோன்றி நிற்பவன்' என்றவாறு. 'தொண்டர் பரவும் மிடற்றாய்' என்பது பாடம் அன்று என்பதனை, பின்வருகின்ற, "தொழில் நோக்கி ஆளும் சுடர்' என்றதனாலும் அறிந்து கொள்க. "தொழில்" என்றது, வழிபாட்டினை; சைவாகமங்களும் இதனை, 'கிரியை' எனக் கூறும். இனி, "தெழில்" என்றது அதன் அளவினையே. 'அதன் அளவு, பொருளும் காலமும் முதலிய புறமாயவை பற்றி' ஆகாது. அன்பாகிய அகமாயது பற்றியே ஆம்' என்பது, "பொக்கம் மிக்கவர் பூவும் நீருங் கண்டு - நக்கு நிற்பர் அவர்தம்மை நாணியே" (தி.5 ப.90 பா.9) என்றற் றொடக்கத்துத் திருமொழிகளான் இனிது விளங்கிக் கிடந்தது. "கண்டம் கறுக்கவும் வல்லாய்" என்றது, 'நஞ்சினை உண்ணவும், அதனைக் கண்டத்திற்றானே நிறுத்தவும் வல்லவனே' என்றபடி.

8. பொ-ரை: பெருகி அலைவீசும் ஆறுபோல்பவனே! நீங்காத நோய்களை நீக்குபவனே! உருகிநினைப்பவர்களின் உள்ளத்தில் உள்ளவனே! குறைபாடுகளை நீக்கும் பெருமானே! அரிதில் கிட்டப்பெற்று ஒளிவீசும் பொன் போன்றவனே! ஒருவராலும் குறை கூறப்படாதவனே! கார்மேகமாகிப் பொழியும் மழையானவனே! கயிலை மலையானே! உனக்கு வணக்கம் பல.