| 2656. | மேல்வைத்த வானோர் பெருமான் போற்றி | | | மேலாடு புரமூன்று மெய்தாய் போற்றி | | | சீலத்தான் தென்னிலங்கை மன்னன் போற்றி | | | சிலையெடுக்க வாயலற வைத்தாய் போற்றி | | | கோலத்தாற் குறைவில்லான் தன்னை யன்று | | | கொடிதாகக் காய்ந்த குழகா போற்றி | | | காலத்தாற் காலனையுங் காய்ந்தாய் போற்றி | | | கயிலை மலையானே போற்றி போற்றி. | 10 |
திருச்சிற்றம்பலம்
'நினைந்து' என்பது வருவிக்க, 'என்னையும்' என்னும் இழிவு சிறப்பு உம்மை தொகுத்தலாயிற்று. 'என்னையும் ஒரு பொருளாக நினைந்து ஆட்கொண்டாய்' என வுரைக்க. "மெய்யாக உகந்தாய்" என்றது, 'பிறிது காரணம் இன்றி அவற்றது தூய்மை கருதியே விரும்பினாய்' என்றதாம். குணம் - அருட் குணம்; அவை தன்வயத்தனாதல் முதலிய எட்டுமாம். கை - தும்பிக்கை. 10. பொ-ரை: மேல் உலகில் தங்கும் வாய்ப்பளிக்கப்பட்ட தேவர்கள் தலைவனே! வானில் உலவிய மூன்று மதில்களையும் அம்பு எய்து அழித்தவனே! இராவணன் கயிலையைப் பெயர்க்க அவனை வாயால் அலற வைத்துப் பின் அவனை, உன்னை வழிபடும் பண்பினன் ஆக்கியவனே! அழகில் குறைவில்லாத மன்மதனை ஒருகாலத்தில் சாம்பலாகும்படி கோபித்தவனே! ஒருகாலத்தில் கூற்றுவனையும் வெகுண்டவனே! கயிலை மலையானே! உனக்கு வணக்கம் பல. கு-ரை: மேல் வைத்த - மேலிடத்து வைக்கப்பட்ட. மேல் ஆடு - வானத்தில் திரிகின்ற, சீலத்தான் - நின்னை வழிபடுபவன்; இக் குறிப்புவினைப்பெயர் எதிர்காலம்பற்றியது. "மன்னன்" என்பதன் பின்னுள்ள "போற்றி" என்பதனை அடுத்த தொடரிற் கூட்டுக. ஈண்டும், 'போற்றிச் சிலையெடுக்க' என்பது பாடம் அன்று, சிலை - மலை. கோலம் - அழகு. அதிற் குறைவில்லாதவன், (நிரம்ப உடையவன்) மன்மதன். கொடிது ஆக வன்கண்மை தோன்ற; என்றது, அறியாதார் 'வன்கண்மையாகக் கருத' என்றவாறு. 'காலதனால்' என்பது, 'காலத்தால்' என மருவிற்று. 'அது' பகுதிப் பொருள் விகுதி. "காலனையும்" என்னும் உம்மை ஒருவராலும் காயப்படாமை உணர்த்தி நின்ற சிறப்பும்மை. "கூற்றங் குதித்தலுங் கைகூடும்' (குறள் - 269) என்றார், திருவள்ளுவநாயனாரும்.
|