பக்கம் எண் :

919
 
2658.அதிரா வினைகள் அறுப்பாய் போற்றி

ஆல நிழற்கீழ் அமர்ந்தாய் போற்றி

சதுரா சதுரக் குழையாய் போற்றி

சாம்பர்மெய் பூசுந் தலைவா போற்றி

எதிரா வுலகம் அமைப்பாய் போற்றி

யென்றும்மீ ளாவருள் செய்வாய் போற்றி

கதிரார் கதிருக்கோர் கண்ணே போற்றி

கயிலை மலையானே போற்றி போற்றி.

2


ஆக்கம் வருவித்துரைக்க. ஆனது - பசுவினது. 'ஆட்டான அஞ்சும்' எனவும், பாடம் ஓதுவர். அடங்கார் - பகைவர்; "அடங்காதார் என்றும் அடங்கார்" (நாலடி - 116) என்பதிற்போல, 'அடங்கார், அறிவிலார்' என்றலுமாம். "காட்டானை" என்றது, இனம் பற்றி என்க.

2. பொ-ரை: வினைகள் நடுங்கச் செய்யாதபடி அவற்றை நீக்குபவனே! கல்லால மர நிழற்கீழ் அமர்ந்தவனே! திறமை உடையவனே! சிறந்த குழை என்னும் காதணியை அணிந்தவனே! சாம்பலை உடலில் பூசும் தலைவனே! தனக்கு ஒப்பில்லாத முத்தி உலகை அமைத்து அதனை அடையும் அடியவருக்கு என்றும் பிறப்பிற்குத் திரும்பி வாராத அருளைச் செய்பவனே! ஒளி வீசும் சூரியன் முதலிய ஒளிகளுக்குப் பற்றுக் கோடாக இருப்பவனே! கயிலை மலையானே! உனக்கு வணக்கம் பல.

கு-ரை: 'அதிராமை, மீளாமை' என்னும் வினையெச்ச மறைகளின் ஈறுகள் கெட்டன. "மீளா அருள்" என்பதற்கு, மீளாமைக்கு ஏதுவான அருள் என்று உரைப்பினும் அமையும். அதிர்த்தல் - நடுங்கச் செய்தல். சதுரா - திறனுடையவனே. சதுரக்குழை - சிறந்து விளங்குங்குழை. எதிரா - இணையில்லாத. இணையில்லாத உலகமாவது பரமுத்திநிலை; அஃது உணர்த்த வாராமையின், உலகமாக அருளிச் செய்தார்; 'எதிரா உலகம்' என்றது, அப்பொருளதாதலை, "என்றும் மீளா அருள் செய்வாய்" எனப் பின்னர் அருளிச் செய்த குறிப்பானும் உணர்க. "அமைப்பாய்" என்றது, 'வழங்குவாய்' என்றவாறு. "கதிரார் கதிர்" என்பதில் பின்னுள்ள கதிர், 'ஞாயிறு' என்னும் பொருட்டாய், வாளா பெயராய் நின்றது. "கண்" என்றது, 'கண்போலச் சிறந்தவன்' என்னும் பொருளதாய், இன்றியமையாமை உணர்த்தி, ஞாயிற்றின் ஒளிக்கும் முதல் ஒளியாய் நிற்றலை விளக்கிற்று.