| 2667. | சிலைநவின்ற தொருகணையாற் புரமூன் றெய்த | | | தீவண்ணர் சிறந்திமையோர் இறைஞ்சி யேத்தக் | | | கொலைநவின்ற களியானை யுரிவை போர்த்துக் | | | கூத்தாடித் திரிதருமக் கூத்தர் நல்ல | | | கலைநவின்ற மறையவர்கள் காணக் காணக் | | | கடுவிடைமேற் பாரிடங்கள் சூழக் காதல் | | | மலைமகளுங் கங்கையுந் தாமு மெல்லாம் | | | வலம்புரமே புக்கங்கே மன்னி னாரே. | 2 |
கு-ரை: மண் அளந்த மணி வண்ணர், திருமால்; 'மணி வண்ணர்' என்ற பன்மை, நகையை உள்ளுறுத்தது. மறையவன் - பிரமன். "மற்றை" என்பதனை, "வானவரும்" என்பதனோடு கூட்டுக. அணிந்தவை பல பாம்புகளாயினும், கையிற் பிடித்து ஆட்டி மகிழ்வது ஒரு பாம்பு என்க. கதம் - சினம். "காணீர்" என்பது முன்னிலை அசை: இதனை இறுதிக் கண் கூட்டுக. "அன்றே" என்றது, தான் கண்ட அந் நாளினை, 'அன்றே வலம்புரம் புக்கு' என்க. பண் மலிந்த மொழியவர், தன்னைப்போலும் பெண்டிர். பணிதல் - அடிக்கண் வீழ்தலும். இறைஞ்சுதல் - தலை வணங்குதலுமாம். "பின்பின்' என்னும் அடுக்கு இடைவிடாமை குறித்தது. "அங்கே" என்னும் ஏகாரம், 'மீள இவண் போந்திலர்" என்பது குறித்த பிரிநிலை. 'நெற்றி யுடையவரும் கையுடையவருமாகிய ஒருவர், நின்று, செல்ல, புக்கு மன்னினார்' என வினைமுடிவு செய்க. 2. பொ-ரை: வில்லில் பழகிய அம்பு ஒன்றால் முப்புரமும் அழித்த, தீயைப் போன்ற செந்நிறமுடைய பெருமானாய், இமையவர்கள் வழிபட்டுப்புகழக் கொலைத் தொழிலில் பழகிய மத யானையின் தோலை உரித்துப் போர்த்துக் கூத்தாடிக்கொண்டு எங்கும் செல்லும் அக்கூத்தர், கலைகளில் பழகிய அந்தணர்கள் காணவும், பூதகணங்கள் சூழவும், விரைவாகச் செல்லும் காளை மீது பார்வதியும் கங்கையும் தாமுமாக இவர்ந்து, வலம்புரம் சென்று அங்கே தங்கி விட்டார். கு-ரை: சிலை நவின்ற - வில்லிற் பொருந்திய. சிறந்து - சிறந்து தோன்றி. கொலை நவின்ற - கொலை பயின்ற. களி - மதமயக்கம். கலை நவின்ற - கலைகளைப் பயின்ற. அடுக்கு, பன்மை குறித்தது. பாரிடம் - பூதகணம். 'மலைமகளையும் கங்கையையும் அணைத்துச் சென்றவர், எம்மை நோக்காதே போயினார்' என வருந்தினாள். 'தீவண்ணரும் கூத்தரும் ஆகிய அவர், காண, சூழ, புக்கு மன்னினார்' என்க.
|