பக்கம் எண் :

931
 
2670.அனலொருகை யதுவேந்தி யதளி னோடே

ஐந்தலைய மாநாகம் அரையிற் சாத்திப்

புனல் பொதிந்த சடைக்கற்றைப் பொன்போல்மேனிப்

புனிதனார் புரிந்தமரர் இறைஞ்சி யேத்தச்

சினவிடையை மேல்கொண்டு திருவா ரூருஞ்

சிரபுரமும் இடைமருதுஞ் சேர்வார் போல

மனமுருக வளைகழல மாயம் பேசி

வலம்புரமே புக்கங்கே மன்னி னாரே.

5

2671.கறுத்ததொரு கண்டத்தர் காலன் வீழக்

காலினாற் காய்ந்துகந்த காபா லியார்

முறித்ததொரு தோலுடுத்து முண்டஞ் சாத்தி

முனிகணங்கள் புடைசூழ முற்றந் தோறுந்

தெறித்ததொரு வீணையராய்ச் செல்வார் தம்வாய்ச்

சிறுமுறுவல் வந்தெனது சிந்தை வௌவ

மறித்தொருகால் நோக்காதே மாயம் பேசி

வலம்புரமே புக்கங்கே மன்னி னாரே.

6


5. பொ-ரை: ஒருகையில் தீயை ஏந்தி, இடையில் அணிந்த தோலாடை மீது ஐந்தலையை உடைய பெரிய பாம்பினை இறுகக் கட்டிக் கங்கை தங்கிய சடைமுடியும் பொன் போன்ற திருமேனியும் உடைய புனிதர், விரும்பித் தேவர்கள் வழிபட்டுத்துதிக்கக் கோபம் உடைய காளையை இவர்ந்து, திருவாரூரும் சிரபுரமும், இடைமருதும் அடைபவரைப்போல, என்மனம் உருகுமாறும் வளைகள் கழலுமாறும் என்னிடத்துப் பொய்யாகச் சிலவற்றைப் பேசி வலம்புரமேபுக்கு அங்கே மன்னினார்.

கு-ரை: "கையது" அது, பகுதிப்பொருள் விகுதி. 'கையதன் கண்' என உருபு விரிக்க. அதள் - தோல். புனல் பொதிந்த - நீர் உள் நிறைந்த. புரிந்து - விரும்பி. சிரபுரம் - சீகாழி.

6. பொ-ரை: நீலகண்டராய்க் கூற்றுவன் அழியுமாறு காலினால் உதைத்து மகிழ்ந்த காபாலக்கூத்தாடும் பெருமானார் தாம் உரித்த தோலை ஆடையாக உடுத்து, திருநீறு பூசி முனிவர்கள் தம் இருபுடையும் சூழ்ந்துவர, வீடுகளில் முன்னிடம் தோறும் வீணையை இசைத்துக் கொண்டு சென்றாராக, அவருடைய புன்சிரிப்பு என் சிந்தையைக் கவர, மீண்டும் ஒருமுறை என்னை நோக்காமல் பொய்யாக ஏதோ பேசி, வலம்புரமேபுக்கு அங்கே மன்னினார்.