பக்கம் எண் :

935
 

அடைக்கலமாக வந்தடைந்த, 'சுக்கிரீவன், வீடணன்' என்பவர்களைக் குறித்தது. முடிகள், தலையில் அணியப்பட்டவை. 'பொடி வாய் வீழ' என்பது பாடமாயின், மண்ணில் விழ' என உரைக்க. 'திருமால் அரிதில் வெல்லும் ஆற்றலுடையவனைக் கால் விரலால் சிறிதே ஊன்றி அடர்த்தார்' எனவும், 'திருமால்போல அடர்த்தே ஒழியாது, பின்பு அவனுக்கு அருள்புரிந்தார்' எனவும் வியந்தவாறு. இவ்வாறு அவரது ஆண்மை மிகுதியையும். அருள் மிகுதியையும். நினைந்து நினைந்து ஒருகாலைக்கொருகால் காதல் மீதூரப் பெற்றாள் என்க. ஆண்மையும் அருளும் உடைய ஆடவரிடத்திற்றானே மகளிர்க்குக் காதல் பிறக்கும் என்பதனை, "கொல்லேற்றுக் கோடஞ்சு வானை மறுமையும் - புல்லாளே ஆயர் மகள்" (கலி - 103 அடி 63 - 64) எனவும், "பொருளே காதலர் காதல் - அருளே காதலரென்றி நீயே" (அகம் - 53 அடி 15 - 16) எனவும் வருவனபோல்பவற்றாற் குறிப்பர், சான்றோர்.

திருநாவுக்கரசர் புராணம்

திங்களூர் தனினின்றுந் திருமறையோர் பின்செல்லப்

பைங்கண்விடைத் தனிப்பாகர் திருப்பழனப் பதிபுகுந்து

தங்குபெருங் காதலொடுந் தம்பெருமான் கழல்சார்ந்து

பொங்கியவன் புறவணங்கி முன்னின்று போற்றிசைப்பார்.


புடைமாலை மதிக்கண்ணிப் புரிசடையார் பொற்கழற்கீழ்

அடைமாலைச் சீலமுடை யப்பூதி யடிகடமை

நடைமாணச் சிறப்பித்து நன்மைபுரி தீந்தமிழின்

தொடைமாலைத் திருப்பதிகச் சொன்மாலை பாடினார்.


எழும்பணியு மிளம்பிறையு மணிந்தவரை யெம்மருங்குந்

தொழும்பணி மேற்கொண்டருளித் திருச்சோற்றுத் துறைமுதலாத்

தழும்புறுகேண் மையினண்ணித் தானங்கள் பலபாடிச்

செழும்பழனத் திறைகோயிற் றிருத்தொண்டு செய்திருந்தார்.

-தி.12 சேக்கிழார்