59. திருவெண்ணியூர் பதிக வரலாறு: திருநாவுக்கரசர், திருப்பெருவேளூர் பணிந்து அங்கிருந்து திருவிளமர் செல்லுங்காலைப் பிற பதிகளை வணங்கிப் பாடியருளியவற்றுள் ஒன்றுபோலும் இத்திருப்பதிகம். (பிற பதிகளாவன, திருவெண்ணியூர், திருப்பூவனூர், திருக்கரவீரம் முதலியன. (தி.12 திருநாவு. புரா. 217) குறிப்பு: இத்திருப்பதிகம், சிவபிரானது பெருமையைப் பல்லாற்றானும் எடுத்தோதியருளியது. திருத்தாண்டகம் | ப. தொ. எண்: 272 | பதிக எண்: 59 |
திருச்சிற்றம்பலம் | 2676. | தொண்டிலங்கும் அடியவர்க்கோர் நெறியி னாருந் | | | தூநீறு துதைந்திலங்கு மார்பி னாரும் | | | புண்டரிகத் தயனொடுமால் காணா வண்ணம் | | | பொங்குதழற் பிழம்பாய புராண னாரும் | | | வண்டமரும் மலர்க்கொன்றை மாலை யாரும் | | | வானவர்க்கா நஞ்சுண்ட மைந்த னாரும் | | | விண்டவர்தம் புரமூன்றும் எரி செய்தாரும் | | | வெண்ணியமர்ந் துறைகின்ற விகிர்த னாரே. | 1 |
1. பொ-ரை: வெண்ணி என்ற திருத்தலத்திலே விரும்பித் தங்கியிருக்கின்ற உலகியலிலிருந்த வேறுபட்டவராகிய சிவபெருமானார், தொண்டுகளால் விளங்கும் அடியவர்களுக்கு ஒப்பற்ற வழியாய் உள்ளவரும், திருநீறு அணிந்த மார்பினரும், தாமரையிலுள்ள பிரமனும் திருமாலும் காணமுடியாதபடி தழற்பிழம்பாய்க் காட்சி வழங்கிய பழம்பொருளானவரும், வண்டுகள் தங்கும் கொன்றை மாலை அணிந்தவரும், தேவர்களுக்காக விடத்தை உண்டவலியவரும், பகைவருடைய மும்மதில்களையும் தீக்கு இரையாக்கியவரும் ஆவார். கு-ரை: தொண்டு இலங்கும் அடியவர் - தொண்டுகள் விளங்கும் இடமாய் நிற்கின்ற அடியார்கள். அவர்கள் தம் பெருமானையே பற்றுக்கோடாகக் கொண்டு ஒழுகுதலின், "அடியவர்க்கு ஓர் நெறியினார்" என்றருளினார். 'நெறியானாரும்' என்பதும் பாடம். புராணனார் - பழையவர். மைந்தனார் - வலியவர். விண்டவர் - பிரிந்தவர்; பகைவர்.
|