பக்கம் எண் :

940
 
2682.மட்டிலங்கு கொன்றையந்தார் மாலை சூடி

மடவா ளவளோடு மானொன் றேந்திச்

சிட்டிலங்கு வேடத்த ராகி நாளுஞ்

சில்பலிக்கென் றூரூர் திரிதர் வாருங்

கட்டிலங்கு பாசத்தால் வீச வந்த

காலன்றன் கால மறுப்பார் தாமும்

விட்டிலங்கு வெண்குழைசேர் காதி னாரும்

வெண்ணியமர்ந் துறைகின்ற விகிர்த னாரே.

7

2683.செஞ்சடைக்கோர் வெண்டிங்கள் சூடி னாருந்

திருவால வாயுறையுஞ் செல்வ னாரும்

அஞ்சனக்கண் அரிவையொரு பாகத் தாரும்

ஆறங்கம் நால்வேத மாய்நின் றாரும்

மஞ்சடுத்த நீள்சோலை மாட வீதி

மதிலாரூர் புக்கங்கே மன்னி னாரும்

வெஞ்சினத்த வேழமது உரிசெய் தாரும்

வெண்ணியமர்ந் துறைகின்ற விகிர்த னாரே.

8


7. பொ-ரை: தேன்பொருந்திய கொன்றைமாலை சூடி மான் ஒன்றைக் கையில் ஏந்திப் பார்வதியோடு ஞானம் புலப்படும் வேடத் தோடும் சிலவாகிய பிச்சைக்காக ஊர் ஊராகத் திரிபவரும், உறுதியான பாசத்தால் மார்க்கண்டேயனைக் கட்டவந்த கூற்றுவனுடைய வாழ் நாளைப் போக்கியவரும், ஒளிவீசும் வெள்ளிய காதணி சேரும் காதுகளை உடையவரும், வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே.

கு-ரை: மட்டு இலங்கு - தேனோடு விளங்குகின்ற. 'சிட்டம்' என்பது 'சிட்டு' என நின்றது; 'ஞானம்' பொருள் இறைவனது வேடங்கள் ஞானத்தைத் தருதல் அறிக. கட்டு - கட்டுதல்; முதனிலைத் தொழிற்பெயர். காலன்றன் காலம் - கூற்றுவனது வாழ்நாள். விட்டு இலங்குதல் - விட்டு விட்டு ஒளிர்தல்; மின்னுதல்.

8. பொ-ரை: செஞ்சடையில் வெண்பிறை சூடியவரும், திருவால வாய் உறையும் செல்வரும், மைதீட்டிய கண்களை உடைய பார்வதி பாகரும்,