பக்கம் எண் :

943
 

60. திருக்கற்குடி

பதிக வரலாறு:

சுவாமிகள் திருவானைக்கா, திருவெறும்பியூர்மலை, திருச்சிராப்பள்ளி இவற்றை வணங்கித் திருக்கற்குடி தொழுது பாடியருளியது இத்திருப்பதிகம். (தி.12 திருநாவு. புரா. 302)

குறிப்பு: இத்திருப்பதிகம், திருக்கற்குடியில் இறைவனைக் கண்ட காட்சியின்பத்தின் மிகுதியில் அவனது பெருமைகளைப் பலவாறு எடுத்துப் பாராட்டி, 'இக் கற்பகத்தை நான் கண்ணாரக் கண்டேன்' என்றருளிச் செய்தது.

திருத்தாண்டகம்

ப. தொ. எண்: 273

பதிக எண்: 60

திருச்சிற்றம்பலம்

2686.மூத்தவனை வானவர்க்கு மூவா மேனி

முதலவனைத் திருவரையின் மூக்கப் பாம்பொன்

றார்த்தவனை அக்கரவ மார மாக

அணிந்தவனைப் பணிந்தடியா ரடைந்த அன்போ

டேத்தவனை யிறுவரையில் தேனை ஏனோர்க்

கின்னமுத மளித்தவனை யிடரை யெல்லாங்

காத்தவனைக் கற்குடியில் விழுமி யானைக்

கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே.

1


1. பொ-ரை: தேவர்களுக்கு எல்லாம் மூத்தவனாய், மூப்படையாத திருமேனியை உடைய முதல்வனாய், இடுப்பில் கொடிய பாம்பைச் சுற்றியவனாய், எலும்புகளையும், பாம்புகளையும் மாலையாக அணிந்தவனாய், அடியவர்களால் பணிந்து அன்போடு தோத்திரிக்கப்படுபவனாய், பெரிய மலையில் உள்ள தேன் போன்றவனாய், தேவர்களுக்கு இனிய அமுதம் வழங்கியவனாய், துயரங்களில் இருந்து எல்லோரையும் காத்தவனாய், கற்பகம் போன்றவனாய்க் கற்குடியில் மேம்பட்டவனாய் உள்ள பெருமானை அடியேன் கண்ணாரக் கண்டேன்.