| 2691. | பெண்ணவனை ஆணவனைப் பேடா னானைப் | | | பிறப்பிலியை இறப்பிலியைப் பேரா வாணி | | | விண்ணவனை விண்ணவர்க்கு மேலா னானை | | | வேதியனை வேதத்தின் கீதம் பாடும் | | | பண்ணவனைப் பண்ணில்வரு பயனா னானைப் | | | பாரவனைப் பாரில்வாழ் உயிர்கட் கெல்லாங் | | | கண்ணவனைக் கற்குடியில் விழுமி யானைக் | | | கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே. | 6 |
தீராத சூலைநோய் சில நொடிகளில் தீர்ந்த அநுபவத்தால் உணரக் காட்டினமை. சங்கரன் - இன்பம் செய்வபன். தழல் உறு - நெருப்பாய்ப் பொருந்திய. தாள் - கைப்பிடி; 'முயற்சிக்குரிய' என்றலுமாம். 'தழல் உறு மழுவாள்' என இயையும். அங்கம் - எலும்பு. 'ஆகம்' இரண்டில், முன்னது மார்பு; பின்னது உடம்பு. "தம்மின் மருவ" என்றது, 'அவை அங்ஙனம் மருவாத பகைப் பொருள்கள்' என்பது தோற்றுவித்தது. வான் நீர்க் கங்கை - விண் யாறாகிய கங்கை; பிரமன் உலகத்திலிருந்த கங்கையை அவனை நோக்கித் தவம் செய்து பகீரதன் பூமியிற் கொணர, அவன் பொருட்டு அதனைச் சிவபிரான் சடையில் தாங்கினன் என்பது புராணம். 6. பொ-ரை: பெண்ணாய், ஆணாய், அலியாய்ப் பிறப்பு இறப்பு அற்றவனாய், ஓசை நீங்காத விண்ணாய், விண்ணவர்க்கு மேம்பட்டவனாய், வேதியனாய், வேத கீதம் பாடும் பண்ணாய்ப் பண்ணில் வரும் பயனாய் அமைபவனாய், நில உலகமாய், அவ்வுலகில் வாழும் உயிர்களுக்கு எல்லாம் பற்றுக்கோடாய், கற்பகமாய் உள்ள கற்குடியில் விழுமியானைக் கண்ணாரக் கண்டேன் நானே. கு-ரை: "பெண்ணவன்" முதலியவற்றில் அகரம் சாரியை. பேரா - நீங்காத. வாணி - சொல்; ஓசை ஆகாயத்தின் குணமாதலின், 'சொல்லுக்குக் காரணமாய் உள்ள ஆகாயம்' என்பார், "பேராவாணிவிண்" என்றருளினார். 'ஆணி' எனப் பிரித்து, 'நீங்காத ஆணிபோல எல்லாவற்றையும் நிலைபெறுவிக்கின்ற விண்' என்றுரைத்தலுமாம். பண்ணவன் - இசையை உடையவன். பண்ணில் வருபயன், இன்பம். 'உயிர்கட்குக் கண்' என்றது, காட்சியை (அறிவை) உண்டாக்குதல் பற்றி.
|