பக்கம் எண் :

953
 
2697.விடிவதுமே வெண்ணீற்றை மெய்யிற் பூசி

வெளுத்தமைந்த கீளொடுகோ வணமுந் தற்றுச்

செடியுடைய வல்வினைநோய் தீர்ப்பாய் என்றுஞ்

செல்கதிக்கு வழிகாட்டுஞ் சிவனே யென்றுந்

துடியனைய இடைமடவாள் பங்கா வென்றுஞ்

சுடலைதனில் நடமாடுஞ் சோதீ யென்றுங்

கடிமலர்தூய்த் தொழுமடியார்நெஞ்சி னுள்ளே

கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே.

2


இங்கு, 'விளங்க' என ஒரு சொல் வருவிக்க. இது பூவிற்கு உரியதாக அருளப்பட்டது. 'வைகலும் (நாள்தோறும்)' என்னும் உம்மை தொகுத்தலாயிற்று. மறவாமை ஒன்றே வேண்டப்படுவதாகலின், வாழ்த்தல் முதலியன வைகலும் செய்ய வேண்டுவவாயின. காதன்மை - அன்பு; காதல் பண்பாதலாலும் பண்பிற்குப் பண்பின்று ஆதலாலும், இதுபோலும் இடங்களில் வரும் பண்புணர்த்தும் மை விகுதி பகுதிப்பொருள் விகுதியேயாம். "காதன்மை கந்தா" (குறள் - 507) என வருவதும் காண்க. 'தொழுமிடத்து, அன்பு ஒனறே இன்றியமையாதது' என்பதனை வலியுறுத்துதற்கு, இறுதிக்கண் மறித்தும் காதன்மையால் தொழும் அடியார்" என்றும், புறத்துப் பிற இடங்களில் விளங்குதல் பொதுவாக, அகத்து அன்பில் விளங்குதலே உண்மையாகலின், "நெஞ்சினுள்ளே காணலாம்" என்றும் அருளிச் செய்தார். "நெஞ்சினுள்ளே" என்னும் ஏகாரம் உண்மை வகையை நோக்குங்கால் பிரிநிலையாம்; பொதுவகையை நோக்குங்கால் தேற்றமாம். நெஞ்சினுள் விளங்குதல் உண்மையாதல் உணர்த்துவார், "காணலாம்" என்றருளினாராகலின், நெஞ்சினைக் காண்டல் கூடுமாயின் அதனுள் காணலாம் என்பதே கருத்தாம். இத் தலத்துள் கன்று கட்டுதற்கு நடப்பட்டதறிதானே சிவனுருவாயினமையின், இங்குச் சிவபிரானை "நடுதறி" என்றே அருளிச்செய்தார். இதனுள், நாள்தொறும் தொழுதல் சிறப்பாகப் பணித்தருளப்பட்டது.

2. பொ-ரை: பொழுது விடிந்த அளவில் திருநீற்றை மெய்யில் பூசி, வெளுத்த கீளொடு கூடிய கோவணத்தை அணிந்து, கீழ்மையை உடைய வல்வினையால் ஏற்பட்ட நோயினைத் தீர்ப்பவனே! சென்று சேர வேண்டிய நல்லகதிக்கு வழிகாட்டும் சிவனே! உடுக்கை போன்ற இடையை உடைய பார்வதி பாகனே! சுடுகாட்டில் கூத்து நிகழ்த்தும் ஒளி உருவனே! என்று நறுமண மலர்களைத் தூவி வழிபடும் அடியவர்கள் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காணலாம்.