பக்கம் எண் :

956
 
துலங்காமெய் வானவரைக் காத்து நஞ்சம்

உண்டபிரா னடியிணைக்கே சித்தம் வைத்துக்

கலங்காதே தொழுமடியார் நெஞ்சி னுள்ளே

கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே.

4


செய்யும் அன்பை மேற்கொண்டு, பொய்யை விடுத்து, மெய்யுணர்வு விளங்கப் பெறாத தேவர்களைக் காக்க விடம் உண்ட பெருமான் திருவடிக்கண் மனத்தை வைத்துக் கலக்கம் இன்றித் தொழும் அடியவர் உள்ளத்தினுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காணலாம்.

கு-ரை: இலம் - (யாம்) பொருள் இலம். காலம் செல்லா நாள் - இக்காலம் எம்மால் ஒன்றும் இயலாத காலம்; 'என்றெல்லாம் எண்ணி நெஞ்சகத்தில் இடையாதே (சிறிதும் தளர்ச்சியுறாமல்)' என்க.

"இலங்காலம்" என்றற்கு இவ்வாறன்றி, "இலம்படுபுலவர்" (மலைபடுகடாம் - 576.) என்புழிப்போல, 'இன்மையுட்பட்ட காலம் என உரைக்க' எனின், 'இன்மை' என்னுங் குறிப்புணர்த்தும், 'இலம்' என்னும் சொல்லின் ஈற்று மகரங்கெடாது நிற்றல் வருமொழி வினையாய விடத்தே என்பது, "இலமென் கிளவிக்குப் படுவரு காலை" (தொல். எழுத்து - 316) என, வருமொழியை எடுத்தோதி யதனாற் பெறபடுதலின், அங்ஙனம் உரைக்கலாகாமை யறிக. "இலம் படு" என்றாற்போல்வனவற்றை, 'இலம்பட்ட (இன்மை உண்டாகிய)' என அல்வழியாக விரிப்பின், பின்னர் வருகின்ற, "புலவர்" என்றாற் போலும் பெயர்களோடு இனிது இயையாமையின், 'இலத்துக்கட்பட்ட, (இன்மைக்கட்பட்ட) என்றாற்போல, வேற்றுமையாக விரிக்க' என்பார். அதன்கண் ஐயம் நிகழாதவாறு, பொது விதியால், மரக்கோடு என்றாற்போல மகரங்கெட்டே முடிதலையும், "மெய்பிறிதாகிடத்து" (தொல். எழுத்து. 157) என்னும் நூற்பாவினுள் தன்னின முடித்தலால், "கன்னின்றா னெந்தை கணவன் களப்பட்டான்" (பு. வெ. மா. 176) "புலம்புக் கனனே புல்லணற் காளை" (புறம். 258) என்றாற்போல மகரங்கெட்டுங் கெடாதும் உறழ்ந்து முடிதலையும் விலக்கி, ஈண்டு மகரங் கெடாதே நிற்றல் வேண்டும்' என யாப்புறுத்தற் பொருட்டு, மேற்காட்டிய நூற்பாவினை ஓதினார் ஆசிரியர்; அஃது உணராமையால், உரையாளர், ஆண்டுப்பெரிதும் இடர்ப்பட்டு உரை உரைத்தனர்; அவையெல்லாம் ஈண்டுத் தோன்றக்கூறிற் பெருகும். "இலம்பாடு (இன்மை உண்டாதல்) (தொல். சொல் - 260) என்றாற்போல அல்வழியாய், அமைவன, "அல்வழியெல்லாம் மெல்லெழுத்தாகும்" (தொல். எழுத்து - 314) என்றதனானே முடியும் என்க.