பக்கம் எண் :

957
 
2700.விருத்தனே வேலைவிட முண்ட கண்டா

விரிசடைமேல் வெண்டிங்கள் விளங்கச் சூடும்

ஒருத்தனே உமைகணவா உலக மூர்த்தீ

நுந்தாத வொண்சுடரே அடியார் தங்கள்

பொருத்தனே யென்றென்று புலம்பி நாளும்

புலனைந்தும் அகத்தடக்கிப் புலம்பி நோக்கிக்

கருத்தினால் தொழுமடியார் நெஞ்சி னுள்ளே

கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே.

5


பசி தீர்க்கப்படுதற்கு, பசித்துவந்து இரந்தார் அனைவரும் உரியராகலின், "யாவர்க்கும்" என்றருளினார். "நல்விருந்தோம்பு வான்" (குறள் - 84) என விருந்தினைச் சிறப்பித்துக் கூறினாற் போலாது, "அற்றா ரழிபசி தீர்த்தல்" (குறள் - 226) என வாளா கூறியதுணர்க. "நெறி" எனப் பின்னர் வருகின்றமையின், வாளா, "விலங்காதே" என்றார். அறிவு - இறைவன் எல்லாநலங்களையும் தானே தரும் பெருங்கருணையாளனாதலை அறியும் அறிவு. மெய்யன்பு - பயன் கருதாது செலுத்தும் அன்பு; 'அதனை வருந்தியேனும் பெறுக' என்பார், "புகப் பெய்து" என்றருளினார். பொய் - பயன் கருதி அன்பு செய்தல். அவ்வாறு செய்தல் வழிமுறையிற் பயன் தருவதாயினும், இறைவன் நெஞ்சினுள்ளே விளங்கித் தோன்றுதலாகிய ஈண்டுக் குறிக்கும் பயனை நேரே தாராமை, பற்றி "நீக்கி' என்றருளினார். துலங்காமெய் - மெய்துலங்கா; மெய்யுணர்வு விளங்கப்பெறாத (வானவர் என்க) 'துலங்காமே' என்பது பாடம் அன்று. கலங்காதே மனம் சிறிதும் தடுமாற்றம் இன்றி; நன்னெறியைத் தெளிந்து, இதனால், உயிர்களிடத்து இரக்கமுடைமை சிறந்தெடுத்துப் பணித்தருளப்பட்டது.

5. பொ-ரை: 'மூத்தோனே! விடம் உண்ட நீலகண்டா! சந்திர சடாதரனே! உமைபாகனே! உலகத்தை வடிவாக உடையவனே! தூண்டவேண்டாத ஒளிவிளக்கே! அடியவர்கள் உறவினனே! என்று பலகாலம் கூப்பிட்டு, ஐம்புலன்களையும் உள்ளே அடக்கி, வேற்றுப் பற்றின்றித் தியானித்து, உள்ளத்தோடு தொழும் அடியவர் உள்ளத்துள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காணலாம்.

கு-ரை: விருத்தன் - யாவரினும் முதிர்ந்தவன். உலக மூர்த்தி - உலகம் முழுவதற்கும் ஒருவனாகிய கடவுள். பொருத்தன் - உறவினன். 'பொருந்து' என்னும் முதனிலை திரிந்த 'பொருத்து' என்பது 'உறவு' என்னும் பொருள் தந்தது. "புலம்பி" இரண்டனுள் முன்னது, 'முறையிட்டு' என்னும் பொருளது,