அமைந்த திருவானைக்காவை உகந்தருளியிருக்கும் இடமாக உடைய செல்வனே! உன் பொலிவுடைய திருவடிகளைச் சரணாக அடையப்பெற்றால், துன்பத்தால் வருந்தும் நிலையை யான் அடைவேனோ?' எனக்குத் துன்புறும் நிலை ஏற்படாது என்றபடி. கு-ரை: "எத்தாயர்" என்பது முதலியவற்றில் எகரவினா, 'எத்துணைச் சிறந்த' என உயர்வு குறித்து நின்றது. 'நற்றாய், செவிலித்தாய், முதலாகத் தாயர் பலராகலின், "தாயார்" எனப் பன்மையாக அருளினார். மாடு - செல்வம். "சும்மாடு" என்றது, 'தாங்குவது' என்னும் பொருட்டாய் நின்றது. "ஏவர்" என்றதனை, "சுற்றத்தார்" என்றதன் பின்னர்க் கூட்டி, 'மற்றும் யாவர் தாம்' என உரைக்க. "சும்மாடாம்" என்றாற்போல, 'நல்லராவார்' என ஆக்கம் வருவிக்க. "சும்மாடாம்", "நல்லாராவர்" என்னும் பயனிலைகளை எதிர்நிரல் நிறையாகக் கொடுக்க. "நல்லார்" என்பது உயர்திணை யாகலின், அது "தாயர்" முதலிய நான் கெழுவாய்கட்கும் பயனிலையாம். 'ஒருவரும்' என்னும் முற்றும்மை தொக்கது, 'இல்லையாய்' என எச்சமாக்குக. தீ மூள்வதற்கு இடப்படுவன அனைத்தும், 'விறகு' எனப்படுமாதலின், எளிதிற் பற்றுதற்கு இடுவனவற்றை, "சிறுவிறகு" என எடுத்தோதியருளினார். 'வெந்து தணியுந் துணைதானும் நில்லாது, மூட்டி விட்டு விரைந்து போவர்' என்பது உணர்த்துதற்கு; தீ மூண்டெரிதல் நிகழாநிற்கத் தாம் சென்று கொண்டிருப்பர் என்னும் பொருள்பட, "செல்லாநிற்பர்" என, எதிர்காலத்துள் நிகழ்காலம் பற்றி ஓதியருளினார். "உதவுவார் ஒருவர் இல்லை, செல்லாநிற்பர்" என்றது, "ஏவர் நல்லார்" என்புழி, 'அஃது என்னை' என்றெழும் அவாய் நிலையை நிரப்பியவாறு. சித்து. அறிவு; அது, சத்தியைக் குறித்தது; இறைவனின் வேடங்களெல்லாம் சத்திவடிவமே யாதலின் அவ்வாறு அருளிச்செய்தார்; "காயமோ மாயை யன்று காண்பது சத்திதன்னால்" (சிவஞானசித்தி. சூ. 1.41.) எனவும், "உருவருள் குணங்க ளோடும் உணர்வரு ளுருவில் தோன்றும் கருமமும் அருள்அ ரன்றன் கரசர ணாதி சாங்கம் தரும் அருள் உபாங்கமெல்லாந் தானருள் தனக்கொன் றின்றி அருளுரு உயிருக் கென்றே ஆக்கினன் அசிந்த னன்றே" எனவும் (சிவஞானசித்தி சூ. 1 - 47) அருளியன காண்க. பொன்னி - காவிரியாறு; அஃது என்றும் வற்றாது ஓடுதலின் "நீடு பொன்னி" என்றருளிச் செய்தார். "பெற்றால்" என்று பெறாதார் போல
|