பக்கம் எண் :

965
 

மாற்றியுரைக்க. முற்பட்டமையை, "வந்து" என்றருளினார். காத்தமை, சூலை வாயிலாக மீட்டமை. எப்பாலும் - எப்பொருட்கண்ணும்; இஃது, "ஆக்கி" என்பதனோடு இயையும். திருவருள் பெற்ற பின்னர், நாயனார் எங்கும் சிவனையன்றி வேறுபொருளைக் காணாமையின் "எப்பாலும் நுன்னுணர்வேயாக்கி" என்றருளினார். "நுன் உணர்வு" என்பதனை, 'நுன்னை உணரும் உணர்வு' என விரிக்க. 'நும்' என்னும் பன்மைப் பெயர்க்கு உரிய ஒருமைப்பெயராய், 'நுன்' என்பது திருமுறைக் கண் வழங்கும்; இதுவே, பிற்காலத்தில் நகரங்கெட்டு, 'உன்' எனமருவி உலக வழக்கிலும், செய்யுள் வழக்கிலும் பயின்று வருவது. எப்பாலும் இறைவன் உணர்வே யாதலையே, 'எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் - மெய்ப்பொருள் காண்ப தறிவு' (குறள் - 355) என மெய்யுணர்வாக அருளிச் செய்தார் திருவள்ளுவ நாயனார். அஃதுணராது, அவ்வருமைத் திருக்குறட்கு மாயாவாத உரை உரைத்தார், பரிமேலழகர். அவ்வுரை போலி என்பது, அவர் காட்டிய எடுத்துக்காட்டுள் அவர் கற்பனை எனக் காட்டிய அனைத்தும் உண்மையேயாதலையும், கற்பனையாவது கானலை நீரென்றுணர்தல் போலும் மயக்க உணர்வேயாகலின், அவர் காட்டினாற்போல்வனவற்றை உண்மை என்னாது கற்பனை என்பார்க்கு, யாண்டும் கற்பனையின் வேறாய் உண்மை இல்லா தொழிதலையும், அவர் காட்டினாற் போல்வனவற்றை, நீரில் எழுத்தும் நிகழ் கனவும்போல நிலையா தொழிதல் பற்றி, 'நிலையில் பொருள்' என்றல் அன்றி, 'கற்பனைப் பொருள்' என்றல் ஆசிரியர் கருத்தன்று என்பதற்கு. "நில்லாத வற்றை நிலையின வென்றுணரும் - புல்லறி வாண்மை கடை" (குறள் - 331) என்பதே போதிய சான்றாதலையும் நுனித்துணர வல்லார்க்குத் தெற்றென விளங்குவதாம். ஆகவே, அவர் காட்டினாற் போல்வனவற்றை, 'பொய்' என ஒரோவழி உயர்ந்தோர் கூறுதல் நிலையாமையுடையதென்னுங் கருத்தானன்றி, கற்பனையென்னுங் கருத்தான் அன்று என்பது விளங்கும். விளங்கவே, 'பொய்ப்பொருள்' எனப்படுவன ஒரு நிலையின் நில்லாது திரிந்து பலநிலைப்பட்டுச் செல்வன என்பதும், 'மெய்ப்பொருள்' என்பது, அவ்வாறன்றி யாண்டும் ஒருபெற்றித்தாய்த் திரிபின்றி நிற்பது என்பதும் போதரல் காண்க.

இறைவனை அவனது திருவருள் கண்ணாகக் காணப் பெற்றோர், பின்னர் எவ்விடத்திலும் அவனை யன்றி வேறொரு பொருளையும் காணுதல் இல்லை என்பதனையும், அங்ஙனம் அவர் காணாதொழிதற்குக் காரணம், அவையெல்லாம் மயக்க உணர்வாகிய அஞ்ஞானமே யாதலின், அவ்வஞ்ஞானம் அவர்மாட்டு இல்லா தொழிந்தமையேயாம் என்பதனையும் வரும் பாடலால் அறியலாம்.