| படியேயுங் கடலிலங்கைக் கோமான் தன்னைப் | | | பருமுடியுந் திரள்தோளும் அடர்த்து கந்த | | | அடியேவந் தடைந்தடிமை யாகப் பெற்றால் | | | அல்லகண்டங் கொண்டடியேன் என்செய் கேனே. | 10 |
திருச்சிற்றம்பலம்
உஞ்சேனி, இரும்பை, அம்பர் மாகாளங்களிலும் உறைபவனே! நிலம் முழுதும் சூழ்ந்த கடலிடையே உள்ள இலங்கை மன்னனான இராவணனுடைய பருத்த தலைகளையும் வலிய தோள்களையும் நெரித்து, மகிழ்ந்த உன் திருவடிகளைச் சரணாக அடைந்து உனக்கு அடிமையாகப் பெற்றால் அல்ல கண்டம் கொண்டு அடியேன் என் செய்கேனே. கு-ரை: கொடி ஏயும் - கொடியிற் பொருந்திய; 'கொடியாகப் பொருந்திய' என்றுமாம். கூளி - பேய் 'பூதம் இணையொத்தாடும்' என்க. "நீயும்" என்றது, 'நின்னாவார் பிறரில்லாத சிறப்புடையையாகிய நீ, அக்குறட்பூதத்தோடு நின்று ஆடுகின்றாய்' என அவனது எளிமைத் தன்மையை நினைந்து அருளியவாறு. "ஆடி" என்னும் எச்சம் எண்ணுப்பொருட்டு. வடிவு ஏயும் - அழகு பொருந்திய. மாகாளம், வைப்புத்தலம். "படி ஏயும்" என்றது. "படியுடையார் பற்றமைந்தக் கண்ணும்" (குறள் - 606). என்புழிப்போல, 'நிலம் முழுதும் உடைய' எனப்பொருள் தந்தது. மேலெல்லாம் "உன் பொற் பாதம் அடையப்பெற்றால்" என அருளிப் போந்ததனை இறுதியில் இனிது விளக்கத் திருவுளம்பற்றி, "இலங்கைக் கோமான்தன்னை அடர்த்து உகந்த அடியே வந்து அடைந்து அடிமை ஆகப்பெற்றால்" என்று அருளிச் செய்தார். அதனால், திருவடி, முன்னர் மறக்கருணையும் பின்னர் அறக்கருணையும் செய்து வாழ்விப்பன என்பதும், அவைகளை அடைதலாவது 'பாதம் ஈசன் பணியலது ஒன்றிலா'து (தி.12 பெ.பு. திருக்கூட்டச் சிறப்பு - 9.) அதனையே மேற்கொண்டு செய்தல் என்பதும் பெறப்பட்டன. "மதில் ஆனைக்கா' என்றருளிய இத்தலத் தின் திருமதிலை, 'சிவபெருமானே எழுந்தருளிவந்து திருநீற்றைக் கூலியாகக் கொடுத்துக் கட்டியது' எனவும், 'இது பாதலம் வரையில் ஊடுருவி யுள்ளது' எனவும் கூறுவர்.
|