பக்கம் எண் :

973
 

63. திருவானைக்கா

பதிக வரலாறு:

இத்திருப்பதிக வரலாற்றை 275ஆம் திருப்பதிகத்திற் காண்க.

குறிப்பு: இத் திருப்பதிகம், திருவானைக்காப் பெருமானைத் தலைப்பட்டு நுகர்ந்த பேரின்ப மேலீட்டில் அருளிச் செய்தது. இதன்கண் அப்பெருமான் மிக்க நீர்த்திரளாய் (அப்பு லிங்கமாய்) நிற்கும் நிலை வியந்துரைக்கப்பட்டது.

திருத்தாண்டகம்

ப. தொ. எண்: 276

பதிக எண்: 63

திருச்சிற்றம்பலம்

2715.முன்னானைத் தோல்போர்த்த மூர்த்தி தன்னை

மூவாத சிந்தையே மனமே வாக்கே

தன்னானை யாப்பண்ணி யேறி னானைச்

சார்தற் கரியானை தாதை தன்னை

என்னானைக் கன்றினையென் ஈசன் தன்னை

யெறிநீர்த் திரையுகளும் காவிரிசூழ்

தென்னானைக் காவானைத் தேனைப் பாலைச்

செழுநீர்த் திரளைச்சென் றாடி னேனே.

1


1. பொ-ரை: முன் ஒரு காலத்தில் யானையைக் கொன்று, அதன் தோலைப் போர்த்தியவனாய், ஞானம் மிகப் பெறாத அடியேனுடைய சிந்தை மனம் வாக்கு இவற்றைத்தான் இவரும் யானைகளாகக் கொண்டு இவர்ந்தானாய், அடியார்க்கு அல்லது மற்றவருக்குக் கிட்டுதற்கு அரியனாய், எல்லோருக்கும் தந்தையாய், என் ஆனைக்கன்று போன்று எனக்கு இனியவனாய், என்னை அடக்கி ஆள்பவனாய், அலைகள் மோதும் காவிரியை அடுத்த அழகிய ஆனைக்காவில் தேனாகவும் பாலாகவும் இனியனாய், நீர்த்திரள் வடிவாக அமைந்த பெருமானை நான் தலைப்பட்டேன்.

கு-ரை: முன் - முற்காலத்தில். "ஆனைத் தோல் போர்த்த" என்றது, 'யானை ஒன்றை உரித்து அதன் தோலைப் போர்வையாகப்