பக்கம் எண் :

974
 

போர்த்துக்கொண்ட' என, இசையெச்சத்தால், வேண்டுஞ் சொற்கள் வந்து இயைய நின்றது. மூவாத - முதிராத; ஞானம் மிகப் பெறாத, "சிந்தையே" முதலிய ஏகாரங்கள் மூன்றும் எண்ணிடைச் சொல்; இவ்விடத்தில், "காயமே" என்பது இனம் பற்றிக்கொள்ளப்படும்; ஏகார எண்ணிற்குத் தொகை கொடாது போயதும் அதுபற்றி. ஏனைய அந்தக் கரணங்களினும் சிந்தை ஆன்ம அறிவிற்கு மிக அணுக்கமாய் நிற்றல் பற்றி ஆன்ம அறிவினை, பெரும்பாலும் 'சிந்தை' எனத் தொல்லாசிரியர் அனைவரும் வழங்குவராகலின், அம்முறை பற்றியே இங்கு அதனை, "சிந்தை" என்று அருளினார். இதனையே, "சிந்தையைச் சீவனென்றும் சீவனைச் சிந்தையென்றும் ........... வந்திடும்" (சிவஞான சித்தி. சூ.4.பா.28.) என விளக்கியது. மருள் வழிப்பட்டுச் சென்ற முக்கரணங்களையும் தன் அருள் வழிப்படுத்து ஆண்டான்' என்றற்கு அவைகளை அவனுக்குரிய மதயானைகளாக உருவகித்து, "தன் ஆனையாப் பண்ணி ஏறினானை" என்று அருளுகின்றவர், அவையெல்லாவற்றிற்கும் அடியாகிய ஆன்ம அறிவினை அதற்கு முன்னே அருள்வழிப்படுத்தினமையை முதற்கண்ணே அருளிச்செய்தார். ஆன்ம அறிவு மருள் வழிப்பட்டு நிற்குங்கால் கரணங்களும் அவ்வாறே நிற்கும்; அஃது அருள்வழிப்பட்டு நிற்குங்கால் அவையும் அவ்வாறே நிற்கும் என்பதனை, சிவப்பிரகாசத்து, 'ஞானவாய்மை' என்னும் பகுதிக்கண் உணர்ந்து கொள்க. அகன் ஞாலத்தகத்துள் தோன்றி வருந்துணையும் சுற்றமும் பற்றும் விட்டு, வான்புலன்கள் அகத்தடக்கி, மடவாரோடும் பொருந்து அணைமேல் வரும் பயனைப்போக மாற்றி, பொதுநீக்கித் தனை நினையவல்லார்க்கு அல்லது (தி.6. ப.1. பா.5.) ஏனையோர்க்குச் சார்தல் கூடாமையின், 'சார்தற்கு அரியானை எனவும், உலகிற்கெல்லாம் ஒரு தந்தையாகலின், "தாதை தன்னை" எனவும் அருளிச்செய்தார். "என் ஆனைக் கன்று" என்றது, காதற்சொல் (தொல் - சொல். 56.). 'எரிகின்ற நீரையுடைய திரை (வீசுகின்ற திவலைகளை உடைய அலை)' என்க.

உகளுதல் - புரளுதல். தென் - தென்னிலத்துக்கண் உள்ள; இஃது இயைபின்மை நீக்கிய விசேடணம்; தென் - அழகுமாம். செழு நீர் - மிக்க நீர். பிறவியாகிய கோடை தணிந்து மெய் குளிரப் பெற்றமையின், 'செழுநீர்த்திரளைச் சென்று ஆடினேன்' என மகிழ்ந்து அருளிச் செய்தார். அந் நீர்த்திரளில் ஆடப்பெற்றதனால் உளதாகிய இன்பம், ஏனை நீரின் இன்பம்போல உடலின் கண்ணதேயாய் ஒழியாது. உள்ளத்தையும் உயிரையும் விழுங்கிக்கொண்டு, இங்ஙன் இருந்தது என்று இயம்பவாராது இருந்தமையின், "தேன்" எனவும், "பால்" எனவும் பலவாற்றான் அருளிச்செய்தார். "செழுநீர்த்