பக்கம் எண் :

978
 
2720.கலையானைப் பரசுதர பாணி யானைக்

கனவயிரத் திரளானை மணிமா ணிக்க

மலையானை யென்தலையி னுச்சி யானை

வார்தருபுன் சடையானை மயானம் மன்னும்

நிலையானை வரியரவு நாணாக் கோத்து

நினையாதார் புரமெரிய வளைத்த மேருச்

சிலையானைத் திருவானைக் காவு ளானைச்

செழுநீர்த் திரளைச்சென் றாடி னேனே.

6


செலுத்தியவனாய், தவத்தில் மேம்பட்டவனாய், காளை வாகனனாய், மானை ஏந்தும் இடக்கையனாய், கங்காள வேடத்தானாய், கட்டங்கம் என்ற படையின் வடிவம் எழுதப்பட்ட கொடியை உடையவனாய், தீயைப்போன்று சிவந்த மேனியனாய்த் திருவானைக்காவுள் உறைபவனாய் உள்ள செழுநீர்த்திரளைச் சென்று ஆடினேனே.

கு-ரை: ஏதும் - சிறிதும். நண்ணாதார் - நெருங்காதவர்; பகைவர். "புண்ணியம்" ஈண்டுத் தவம்; உயிர்கட்குத் தவமாகின்றவன் தானே' என்றவாறு. கடைதலின்கண் தோன்றும் விறகில் தீப்போல, உயிர்கள் செய்கின்ற தவத்தின்கண் மிக்கு விளங்குபவன் என்க; தவமாவது, அவனை நோக்கிச் செய்வதே என்பது முன்னே குறிக்கப்பட்டது. ஏறு அமரும் - எருதை ஊர்தியாக விரும்புகின்ற. இடம் - இடப்பக்கத்தில். செய்யான் - செம்மை நிறம் உடையவன்.

6. பொ-ரை: கலையையும், மழுப்படையையும் ஏந்திய கைகளை உடையவனாய், பெரிய வயிரத்திரளாய், மாணிக்கமலையாய், என் தலையின்மேல் உள்ளானாய், நீண்ட செஞ்சடையனாய், சுடுகாட்டில் நிலையாக இருப்பவனாய், வாசுகி என்ற பாம்பை நாணாகக் கோத்து, தன்னை விருப்புற்று நினையாத அசுரர்களின் மும்மதில்களும் எரிந்து சாம்பலாகுமாறு, வளைக்கப்பட்ட மேருமலையாகிய வில்லினை உடையவனாய், திருவானைக்காவில், உள்ள செழுநீர்த் திரளைச் சென்று ஆடினேனே.

கு-ரை: கலை - மான், பரசு தர பாணி - மழுத் தரித்த கை; மான் மழு ஏந்தினமை குறித்தவாறு. 'பாசுபத பாணியானை' எனவும் பாடம் ஓதுப. கனம் - பெருமை. மணி - அழகு. 'வயிரத் திரளான், மாணிக்க மலையான்' என்பன ஒப்பின் ஆகிய பெயர். வார்தரு - நீண்ட. நினையாதார் - பகைவர்.