பக்கம் எண் :

979
 
2721.ஆதியனை யெறிமணியி னோசை யானை

அண்டத்தார்க் கறிவொண்ணா தப்பால் மிக்க

சோதியனைத் தூமறையின் பொருளான் தன்னைச்

சுரும்பமரும் மலர்க்கொன்றை தொன்னூல் பூண்ட

வேதியனை அறமுரைத்த பட்டன் தன்னை

விளங்குமல ரயன்சிரங்கள் ஐந்தி லொன்றைச்

சேதியனைத் திருவானைக் காவு ளானைச்

செழுநீர்த் திரளைச்சென் றாடி னேனே.

7

2722.மகிழ்ந்தானைக் கச்சியே கம்பன் தன்னை

மறவாது கழல்நினைந்து வாழ்த்தி ஏத்திப்

புகழ்ந்தாரைப் பொன்னுலகம் ஆள்விப் பானைப்

பூதகணப் படையானைப் புறங்காட் டாடல்


7. பொ-ரை: எல்லோருக்கும் முற்பட்டவனாய், மணியின் ஓசை போல எங்கும் பரந்தவனாய், உலகில் உள்ளவரால் அறிய முடியாதபடி உலகுக்கு அப்பாலும் பரவிய சோதி வடிவினனாய், வேதத்தின் விழுமிய பொருளாய், வண்டுகள் தங்கும் கொன்றை மலர், எல்லோருக்கும் முற்படத் தான் பூண்ட பூணூல் இவற்றால் விளங்கும் வேதியனாய், அறத்தை உபதேசித்த ஆசிரியனாய், தாமரையில் விளங்கும் பிரமனுடைய ஐந்து தலைகளில் ஒன்றை நீக்கியவனாய், திருவானைக்காவில் உறைபவனாய், உள்ள செழுநீர்த்திரளைச் சென்று ஆடினேனே.

கு-ரை: ஆதியன் - முதல்வன். அணி மணியிற் பிரித்தற்கு, "எறி மணி" என்றருளினார். 'மணியின்கண் ஓசையாய்க் கலந்து நிற்பவன்' என்க. அண்டத்தார் - வானவர் 'அண்டத்துக்கு அப்பால் மிக்கு விளங்கும் ஒளியாய் உள்ளவன்' என்க. "அண்டம் ஆரிரு ளூடுகடந்தும்பர் - உண்டு போலுமோரொண்சுடர்" (தி.5. ப.97. பா.2.) என்றருளியது காண்க. தொன்னூல் - நூல் பூண்பார் எவரும் பூண்பதற்கு முன்னர்ப் பூண்ட நூல்; எனவே, "வேதியன்" என்றது, 'முதல் வேதியன்' என்றவாறாம். இதனால், 'வேத ஒழுக்கத்திற்கு முதல்வன் அவனே' என்பது குறிப்பிக்கப்பட்டது. பட்டன் - ஆசிரியன். 'சேதி' என்னும் முதனிலைத் தொழிற் பெயரொடு அன் ஈறு புணர்ந்து, 'சேதியன்' என்று ஆயிற்று; 'அறுத்தலை உடையவன்' என்பது பொருள்.

8. பொ-ரை: கச்சி ஏகம்பத்தை விரும்பி உறைபவனாய், தன் திருவடிகளை மறவாது விருப்புற்று நினைத்து வாழ்த்தி உயர்த்திப் புகழ்ந்த அடியவர்களைப் பொன்னுலகு எனப்படும் தேவர் உலகை ஆளச்