பக்கம் எண் :

984
 

அழிக்கும் பொருளாய் அமைந்த அமுதமாய், உலகங்களின் பாரத்தைப் போக்குபவனாய், மலர்களைத் திருவடிகளில் சேர்த்து, விருப்புற்று நினைத்து வழிபடுபவர்களுடைய உள்ளத்தை விடுத்து நீங்காது இருப்பவனாய், உள்ள எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் என் எண்ணத்தான்.

கு-ரை: 'எங்கும் பரந்தவன்' என இயைக்க. எங்கும் - எல்லாப் புவனங்களிலும். பரந்தவன் - பரவியவன். பணிந்தெழுதல் வணங்கும் உணர்வோடே துயிலுணர்தல்; "தம்மையே சிந்தியா எழுவார்வினை தீர்ப்பர்" (தி.3. ப.54. பா.3.) எனவும், "எந்தையார் திருநாமம் நமச்சிவாய - என்றெழுவார்க்கு இருவிசும்பில் இருக்கலாமே" (தி.6. ப.93. பா.10.) எனவும் "தொழுதெழுவார் - வினைவளம் நீறெழ நீறணி யம்பலவன்" (தி.8 திருக்கோவை - 118.) எனவும் அருளியன காண்க. பாவத்தை மட்டிலே நீக்க வேண்டுவார்க்கு அதனையும், இருவினைகளையும் நீக்கவேண்டுவார்க்கு அவைகளையும் நீக்கியருளுவான் என்பார், "பாவமும் வினையும் போகத் துரந்தவன்" என்றருளினார். துரத்தல் - ஓட்டுதல். "மலர்" என்பது சொல்லுவாரது குறிப்பால், கொன்றை மலராம். "தோற்றம் நிலை இறுதி" என்றது. உலகம்படும் முத்தொழிலை. அத்தொடர் உம்மைத் தொகையாய் நின்று, 'அவற்றைச் செய்யும் பொருள்' என, இரண்டாம் வேற்றுமைப் பொருள்மேல், "பொருள்" என்னும் சொல்லோடு தொக்கது. 'நிற்றல்' என்பது உண்மையையுணர்த்தல்போல, 'வருதல்' என்பதும் ஒரோவழி உண்மையை உணர்த்தும்; அதனால் "வந்த" என்றது, 'நின்ற' என்றவாறாம்.

மூலமலமாய நோய்க்குத் தோற்றம் முதலிய மூன்றும் மருந்தாகலானும், "உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வான் என்றப்பால்நாற் கூற்றே மருந்து" (குறள் - 950.) என, நோயைத் தீர்ப்பவனும், "மருந்து" எனப்படுதலானும், "தோற்றம் நிலையிறுதிப் பொருளாய் வந்த மருந்தவன்காண்" என்றருளினார். "மருந்தவன்" என்பதில் அகரம் சாரியை. 'நிலவுலகம்' என்னும் பொருளதாகிய 'வையகம்' என்பது, இங்கு, 'உலகம்' எனப் பொதுப் பொருள் குறித்து நின்றது.

பொறை - சுமை. 'அதனைத் தீர்ப்பான்' என்றது. 'உயிர்களது பிறவியை நீக்கியருளுவான்' என்றவாறு; "வையகங்கள்" என்புழியும் இரண்டனுருபு விரிக்க. "நினைந்தெழுவார்" என்பதற்கும், மேல், "பணிந்தெழுவார்" என்பதற்கு உரைத்தவாறு உரைக்க.